Description
கி.பி. 988...
சோழப் பெருவேந்தராக முதலாம் இராஜராஜ சோழர் முடிசூடி
மூன்றாண்டுகளே முடிவடைந்துள்ள நிலை. அதற்குள் சில அரசியல்
சக்திகள் அணிதிரண்டு அவரை எதிர்க்க ஆயத்தமாகி வருகின்றன.
அந்தச் சக்திகளின்ஆணிவேர்.. காந்தளூர்ச்சாலை எனும் கல்வி
நிறுவனம். சாத்திரங்கள் நுண்கலைகள் தவிரத் தற்காப்புப் பயிற்சி
முறைகளையும் பயிற்றுவித்த பண்டைய பல்கலைக்கழகம்.
சோழநாட்டு வேந்தருக்கும் சேரநாட்டில் எங்கோ ஒரு மூலையில்
அமைந்துள்ள காந்தளூருக்கும் என்ன தொடர்பு? சாலையின்
ஆச்சாரியாருக்கு இராஜராஜர் மேல் அப்படியென்ன பகை? இந்த
இருவரின் விரோதத்தையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்
கொள்ள நினைக்கும் அரசியல் சக்திகள் யார் யார்?
எண்ணற்ற கேள்விகளை எழுப்பும் சரித்திரக் களத்தின் வழி
நம்மைக் கைப்பிடித்து ஒரு வசீகர உலகிற்குள் அழைத்துச் செல்கிறார்
கதாசிரியர். சோழர்கள், பாண்டியர்கள், வேளிர், சேரமான்கள்,
கேரளத்து நாடுவாழிகள் என்று அந்நாளைய அரசியல் சக்திகள்
அனைவரும் முட்டி மோதும் இந்த விறுவிறுப்பான புதினத்தில்
இதுவரை கண்டிராத வகையில் சேரதேசத்தின் பண்டைய களரிக்
கலையும் பண்பாட்டுக் கூறுகளும் பாங்குற வெளிப்படுகின்றன.
பல்வேறு சரித்திரக் குறிப்புகள், கல்வெட்டுச் சான்றுகள், விளக்கப்
படங்கள் மற்றும் வரைபடங்கள் இப்படைப்பை வேறொரு தளத்தில்
நிறுத்துகின்றன. இளமை துள்ளும் நடையில் கற்பனைச் செறிவுடன்
படைக்கப்பட்டுள்ள இப்புதினம் தமிழுலகம் தவறவிட்டுவிட முடியாத
தரமான ஆக்கம்.