Description
அம்பேத்கர்
அம்பேத்கரின் வருகைக்கு முன்னால் இந்திய வரலாறு என்பது ஆதிக்க சாதியினரின் வரலாறாகத்தான் இருந்து வந்தது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நான்தான் பிரதிநிதி என்று காந்தி பெருமிதம் கொண்டிருந்தார். அம்பேத்கர் முதலில் உடைத்தது இந்த மாயையைத்தான். அவரது அரசியல் போராட்டம் இங்கிருந்து தொடங்குகிறது.சாதி இந்துக்களின் கால்களுக்குக் கீழே நொறுங்கிக்கிடப்பதைத் தவிர வேறு மாற்று இல்லை என்று ஒடுக்கப்பட்டவர்களே நம்பியிருந்த காலகட்டம் அது. அம்பேத்கர் தொடுத்த இரண்டாவது யுத்தம் இந்த அவநம்பிக்கையை உடைத்தெறிந்தது. உணவும், உடையும் அல்ல, தன்மானமும் தார்மீக கோபமும்தான் ஒருவரை உயிர்த்திருக்க வைக்கும் என்று அழுத்தமாகப் புரியவைத்தார் அம்பேத்கர்.மனுதர்மத்தை நிராகரித்துவிட்டு மனித தர்மத்தை முன்வைத்தார். மதம் அரசியலாக மாறியதை அம்பலப்படுத்தினார். அரசியல் மதமாக மாறியதையும். தான் உருவாக்கிய சட்டத்தால் சமூகம் பயன்பெறாது என்பதை அறிந்ததும் அதனை கொளுத்தி வீசவும் தயாரானார்.அம்பேத்கரை அவர் எடுத்துக்கொண்ட பிரச்னைகள் மூலம், அவர் முன்வைத்த சமூக ஆய்வுகள் மூலம், அவர் வளர்த்தெடுத்த அரசியல் கோட்பாடுகள் மூலம் தீர்மானிக்கும்போது ஒரு புரட்சியாளராக அவர் நம் கண்முன் விரிகிறார்.அம்பேத்கருக்கான புதிய தேடல்கள் தொடங்கியிருக்கும் இந்தச் சமயத்தில், அம்பேத்கரின் அரசியல், சமூக வாழ்க்கையை அவரது சிந்தனைகள் வாயிலாக துல்லியமாக அறிமுகம் செய்துவைக்கிறார் ஆர். முத்துக்குமார்.
பெரியார்
இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை.அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம், மொழி, கற்பு என்று புனிதமாகக் கொண்டாடப்படும் அனைத்தையும் போட்டு உடைத்தவர். யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்துகொண்டதில்லை பெரியார். கண்முன்னால் ஒரு அராஜகமா? தோழர்களே, திரண்டு வாருங்கள் போராடுவோம்! போராட்டம். அது மட்டும்தான் தெரியும்.பெரியார் முன்வைத்த நாத்திகவாதம் ஆக்ரோஷமானது, ஆவேசமானது, அறிவியல்பூர்வமானது. நிலச் சீர்திருத்தத்தில் இருந்து தொடங்குவோம் என்று கம்யூனிஸ்டுகள் சொன்னபோது, அமைதியாக ஒதுங்கிக்கொண்டார். மதம். அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆணிவேர் இதுவே என்றார். இந்திய சுதந்தரத்துக்குக் கறுப்புக் கொடி. காந்தி, அண்ணா, ராஜாஜி போன்றவர்களுடன் கருத்து மோதல். மணியம்மை திருமணம். திமுக மீது காட்டமான விமரிசனங்கள். அதிகாரத்துக்கு அடங்கிப்போக மறுக்கும் குணம். சர்ச்சைகளுக்குச் சற்றும் பஞ்சமில்லா வாழ்க்கை அவருடையது.தீரமிக்க போராட்டப் பாரம்பரியம் பெரியாரோடு தொடங்கி பெரியாரோடு முற்றுப்பெறுகிறது. பெரியாரை நம் கண்முன் நிறுத்தும் இந்நூல், வரலாற்றில் அவர் வகித்த பாத்திரத்தையும் சமூகத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்களையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது.நூலாசிரியர் ஆர். முத்துக்குமார் சமகால இந்திய அரசியல் சார்ந்த ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். NHM மினிமேக்ஸ் பதிப்பின் பொறுப்பாசிரியர்.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்: குமரன் குடில் - 24.06.2009