Description
இந்தியா வல்லரசானால் மட்டும் போதாது, நல்லரசாகவும் ஆக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஆசார்ய மஹாப்ரக்யா, அப்துல் கலாம் ஆகிய இருவரும் முன்வைக்கும் கருத்துகளின் தொகுப்பு இந்நூல். பாரத தேசத்தின் சமூக, பண்பாட்டு, தத்துவார்த்த, ஆன்மிக வளர்ச்சியை அங்குலம் அங்குலமாக இதில் விவரித்திருக்கிறார்கள். ஜாதி, கர்மவினை என இந்திய வாழ்க்கை முறை தொடர்பாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அம்சங்களுக்கான எளிய, அழுத்தமான விளக்கங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த பரிணாம வளர்ச்சியை விவரித்து இன்றைய நிலையில் நம் உலகத்துக்குத் தேவையான பண்புகளை இதில் முன்வைத்திருக்கிறார்கள்.ஒரு தேசத்தின் முன்னேற்றத்துக்கு குடும்பம் என்ன பங்கு வகிக்கிறது... ஒரு குடும்பத்தின் செழுமைக்கு என்னென்ன குணங்கள் தேவை என்பதை விவரித்திருக்கிறார்கள். வெகுஜன ஊடகங்களில் தொடர்ந்து பரப்பப்படும் எதிர்மறையான, அவநம்பிக்கை நிறைந்த, தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செய்திகளுக்கு முற்றிலும் மாறாக உத்வேகம் மற்றும் நம்பிக்கையூட்டக்கூடிய ஆக்கபூர்வமான விஷயங்களை நூல் முழுவதும் இடம்பெறச் செய்திருக்கிறார்கள். பாரம்பரியப் பெருமையும் பன்மைத்துவமும் கொண்ட பாரத தேசம் இந்தப் பாரினில் தன் பழைய முதலிடத்தைப் பெற, அதன் குடிமகன்களாகிய நாம் செய்ய வேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.பாரதத்தை பலம் பெறச் செய்ய விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது. தொடர்ச்சியாக கண்டுபிடிப்புகளை நாம் நிகழ்த்திக்கொண்டே இருக்க வேண்டும். எங்கிருந்து வேண்டுமானாலும் ஒரு கண்டுபிடிப்பைத் தொடங்கலாம். ஒரு மீனவரின் கிராமத்தில் இருந்து. ஒரு விவசாயியின் வீட்டில் இருந்து. வகுப்பறையில் இருந்து. பரிசோதனைச் சாலையில் இருந்து. தொழிற்சாலையில் இருந்து.ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து.- அப்துல் கலாம்