Description
ராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் இரண்டாம் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான கருத்து நிலவிவந்தது. மொழி, கலாசாரம், மதம், பண்பாடு என்று எந்த வகையிலும் இந்தியர்களிடையே ஒற்றுமையோ, ஒருமித்த அம்சங்களோ இருக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை இதுதான் நிலைமை. சுதந்தரத்துக்குப் பிறகும் பெரிதாக மாற்றமில்லை. அமைதி வழிப் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டாலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ரத்தம் சிந்தவேண்டிவந்தது. படுகொலைகள், மதக்கலவரங்கள், தீவிரவாதம், மதவாதம், தனிதேசக் கோரிக்கைகள், ஜாதீய ஒடுக்குமுறை, தீண்டாமை என்று இந்தியாவின் ஆன்மாவுக்குத் தொடர்ந்து பல அடிகள் அடுத்தடுத்து விழுந்தன. போரும் அமைதியும், வறுமையும் செழுமையும், சங்கடங்களும் சாதனைகளும், பஞ்சமும் புரட்சியும் இந்தியாவைத் தொடர்ந்து உருமாற்றி வந்தன. என்றாலும், இந்தியா ஜனநாயகத்தை மட்டும் விட்டுக்கொடுக்கவில்லை. இன்று இந்தியா ஆசியாவின் மிகப்பெரிய சக்தி. பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பலம்பொருந்திய சக்தி. சுதந்தரத்துக்குப் பிறகான இந்தியாவின் கதை அதிகம் சொல்லப்படவில்லை என்னும் குறையை இந்தப் புத்தகம் நிறைவு செய்கிறது. இந்தியாவின் கதை என்பது உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசத்தின் கதையும்கூட. ராமச்சந்திர குஹா 1958ல் டெஹ்ராதூனில் பிறந்தவர். பெங்களூரில் தற்சமயம் வசித்துவருகிறார். ஓஸ்லோ, ஸ்டான்-ஃபோர்ட், யேல் பல்கலைக்கழகங்களிலும் இந்திய அறிவியல் கழகத்திலும் பாடங்கள் நடத்தியுள்ளார். வரலாறு, அரசியல், சுற்றுச்சூழல், கிரிக்கெட் என்று பல துறைகளில் எழுதிவருகிறார். குஹாவின் படைப்புகள் இருபதுக்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.