Description
இந்திய ஆன்மிகம் ஒருபக்கம் புகழப்படும் அதே நேரம், இந்தியச் சமூகத்தில் நிலவும் சாதிப் பிரிவினைகள், தீண்டாமை ஆகியவை குறித்துக் கடுமையான விமர்சனங்கள் இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும்கூட இருப்பதைக் காண முடியும்.சாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலை என்று எதனை எடுத்துக்கொண்டாலும் ‘மநு’ என்ற பெயர் உடனே விவாதத்துக்கு வந்துவிடும். மநு தர்மசாஸ்திரம் என்பது இந்தியாவில் ஒரு காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த சட்டவிதிகளின் தொகுப்பாகும். இந்தியாவின் இன்றைய சமூகப் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் மநு என்பது இன்றைய அரசியல்வாதிகள் பலரின் கருத்து. இந்தியச்சமூகம், ’மநுவாதி’ சமூகம் என்று ‘இகழப்படுகிறது’.உண்மை என்ன? மநு தர்மசாஸ்திரம் என்பதுதான் இந்தியாவின் ஒற்றைச் சட்டப் புத்தகமாக இருந்ததா? மநு தர்மசாஸ்திரம் உண்மையில் சாதிகள் பற்றி என்னதான் சொல்கிறது? மநு தர்மசாஸ்திரம் எழுதப்பட்டதன் காரணம் என்ன? சாதிகளுக்கும் வர்ணத்துக்குமான வித்தியாசங்கள் என்னென்ன? மநு குறித்து டாக்டர் அம்பேத்கர் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார்? தீண்டாமைப் பிரச்சினைக்குக் காரணம் மநுவா? மநு தர்மசாஸ்திரம் என்பது ஒற்றை நூலா அல்லது பல்வேறு காலகட்டங்களில் பலர் புதிது புதிதாக எழுதிச் சேர்த்த ஒரு கலவை நூலா? பிராமணர்கள் என்போர் யார்? சூத்திரர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதா? வர்ணங்களிலிருந்து சாதிகள் தோன்ற யார் காரணமாக இருந்திருக்க முடியும்? பெண்களின் நிலை அக்காலத்தில் நிஜமாகவே மோசமாக இருந்ததா? மநு தர்மசாஸ்திரத்தில் இடைச்செருகல்கள் இருந்திருக்கக்கூடுமா? மநு தர்மசாஸ்திரம் ‘ஆபத்துக் காலம்’ என்ற பெயரில் குறிப்பிடும் காலகட்டம் எது? இந்தியச் சமூகத்துக்கு நிகழ்ந்த பெரும் ஆபத்து யாது? அந்தச் சமயத்தில் இந்தியச் சமூகத்தைக் காக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?இதுபோன்ற பல ஆழமான கேள்விகளை நூலாசிரியர் செண்பகப்பெருமாள் ஆராய்கிறார். சில தெளிவான பதில்கள் கிடைக்கின்றன. நூலாசிரியர், இந்திய வேதாந்தம், மநு தர்மசாஸ்திரம், பைபிள் ஆகிய நூல்களில் ஆழ்ந்த புலமை கொண்டவர். அவை குறித்துப் பல பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்திவருபவர். ஓய்வுபெற்ற ஆசிரியர்.