Description
ஒன்றுடன் ஒன்று பின்னிச்செல்லும் இரு கதைகளால் ஆனது இந்நாவல். ஒன்று பாண்டவர்களின் ஒளிவுவாழ்க்கை. இன்னொன்று நளதமயந்தி கதை. இரண்டு கதைகளையும் ஒன்றையொன்று நிரப்புவதாகப் பின்னிச்செல்லும் ஒற்றை ஒழுக்காக இந்நாவல் அமைந்துள்ளது. கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒப்பீடுகள் , இடைவெட்டுகள் வழியாக உச்சங்களை அடைகிறது. அத்துடன் இது உருமாற்றத்தின் கதை. ஒவ்வொருவரும் பிறிதொருவராகிறார்கள். ஊழால் உருமாற்றம் அடைகிறார்கள். ஆழ்மனத்தில், கனவில் உருமாற்றம் அடைகிறார்கள். ஒளிந்துகொள்ள மாற்றுருக் கொள்கிறார்கள். நிகழ்ந்தவை கதையெனச் சொல்லப்படும்போது மாற்றமடைகின்றன. உருமாற்றம் என்பதனூடாக உருவமென உடலைச் சூடி நின்றிருக்கும் ஒன்றைப்பற்றிய ஆய்வென இந்நாவல் விரிகிறது. நீர்க்கோலம் - வெண்முரசு நாவல் வரிசையில் பதிநான்காவது நாவல். 1024 பக்கங்கள் கொண்ட நாவல் இது. 21 வண்ணப் புகைப்படங்களும் இந்நாவலில் உள்ளன.