Description
ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் இல்லாத இன்றைய சூழல் மிகப்பெரும் வெற்றிடத்தைத் தோற்றுவித்திருக்கிறது. அதிமுகவும் திமுகவும் தெளிவான செயல்திட்டமின்றிக் குழம்பிக்கிடக்கிடக்கின்றன. இதர கட்சிகளும்கூட அந்த வெற்றிடத்தில் சிறிதையாவது கைப்பற்றமுடியுமா என்றுதான் முயற்சி செய்துவருகின்றன. மற்றொரு பக்கம், ஏதேனும் மாயம் நிகழாதா என்று கமல்ஹாசன், ரஜினிகாந்த், சீமான், தினகரன் என்று பலரும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறார்கள்.
அடுத்து என்ன நடக்கும்? மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கவேண்டிய அரசியல் களமே பிரச்னைக்குரியதாக மாறிவிட்ட இந்த நிலை எப்போது மாறும்? நிலவும் அசாதாரணமான சூழலைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் தமிழக வரலாற்றில் பல திருப்புமுனைகளை ஒரே சமயத்தில் ஏற்படுத்திய 2016 தேர்தலின் வரலாற்றை நாம் கவனமாக ஆராயவேண்டியிருக்கிறது.
2016 தேர்தலில் மீண்டும் அதிமுகவால் வெற்றிபெற முடிந்தது எப்படி? மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் போட்டியிட்ட திமுக தோல்வியடைந்தது ஏன்? முந்தைய தேர்தலில் திமுகவைப் பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சியாக உயர்ந்த தேமுதிகவால் ஒரு தொகுதியைக்கூடக் கைப்பற்றமுடியாத விசித்திரம் எப்படி நிகழ்ந்தது? இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மிகுந்த ஆரவாரத்துடன் மலர்ந்த மக்கள் நலக்கூட்டணி பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது ஏன்?
தேர்தல் அரசியல் நகர்வுகளைத் தனித்து அலசாமல் சமூக அரசியலையும் சாதி அரசியலையும் இணைத்து விவாதிக்கும் இந்தப் புத்தகம் முன்வைக்கும் பார்வைகளையும் அறிமுகப்படுத்தும் விவாதங்களையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். சமகாலப் பிரச்னைகளுக்கான விதைகளும் எதிர்கால மாற்றத்துக்கான விதைகளும் கடந்த காலத்தில்தான் தூவப்பட்டிருக்கவேண்டும் இல்லையா?