Description
தாஜுத்தீன் பாபா
ஆரஞ்சுப்பழம், அம்பேத்கரியம், ஆன்மிகம் – இம்மூன்றுக்கும் புகழ் பெற்ற நகரம் நாக்பூர். அதில் ஆன்மிகத்தைச் சேர்த்தவர் தாஜுத்தீன் பாபா. தன் வாழ்நாள் முழுவதும் மானிட நலனுக்காக அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்த மாபெரும் சூஃபி ஞானி அவர். சமுதாயத்தால் மதிக்கப்பட்டவர்கள், மிதிக்கப்பட்டவர்கள், பெண்கள், குழந்தைகள், மிருகங்கள், மரம் மட்டை என அவரது கருணை அனைவரையும், அனைத்தையும் சென்றடைந்தது. இறந்த பிறகும் நடந்த, நடந்துகொண்டிருக்கும் அற்புதங்கள் சந்தேகம் கொண்ட மானிட அறிவின் நாக்குகளை வெட்டுபவையாகும். தான் வாழ்ந்த மனநலக்காப்பகத்தை மக்கள் குறை தீர்க்கும் மன்றமாகவும், நாக்பூரை தாஜ்பூராகவும் மாற்றியவர். நாக்பூரின் ஆரஞ்சுப் பழத்தைப்போல தித்திக்கும் நடையில் நாகூர் ரூமி அவரது கதையைச் சொல்கிறார். படித்துப் பாருங்கள்.
ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்
சூஃபித்துவம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமேயானது அல்ல. அது உலகம் முழுவதற்குமானது. சாதி, மதம், இனம், மொழி, பாலினம் என்று தொடங்கி அனைத்து வேறுபாடுகளையும் கடந்து ஒட்டுமொத்த மானுட குலத்தையும் அணைத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு உள்ளது. அதனால்தான் மேற்குலக நாடுகளும் அறிந்துகொள்ளும் வண்ணம் சூஃபித்துவத்தை அங்கு அறிமுகப்படுத்தினார் ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல். சத்தியத்தின் பாதை எந்த மதத்துக்கும் சொந்தமானதல்ல என்னும் கொள்கை கொண்ட ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் அதை மானுடத்தின் கரங்களில் ஒப்படைத்து விடவேண்டும் என்பதையே தன் வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தார். நாகூர் ரூமியின் இந்நூல் ஹஸ்ரத் ஆஸாத் ரஸூலின் அற்புதமான வாழ்வையும் அவருடைய ஞானத் தேடல்களையும் எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறது. இந்திய சூஃபி மெய்யியல் வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவரும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம் இந்நூல்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மேதைகளில், மாபெரும் இஸ்லாமிய ஆளுமைகளில் ஒருவர் ஷாஹ் வலியுல்லாஹ். அவர் ஒரு மேதைமட்டுமல்ல, கல்வியாளர், சிந்தனையாளர் மற்றும் புரட்சியாளர். எல்லாவற்றுக்கும் மேலாக ஞானிகளின் குடும்பத்தில் பிறந்த இறைநேசர். இந்தியாவில், அல்லது உலகில், முதன் முதலாகத் திருக்குர்’ஆனை அரபியிலிருந்து பாரசீகத்துக்கு மொழிபெயர்த்தவர். மார்க்கத்தின் அகமியங்களை விளக்கி அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஆட்சியாளர்களால் மதிக்கப்பட்டவர், அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்லக்கூடியவர். ரஹீமிய்யா என்று ஒரு மார்க்கக்கல்லூரியை நடத்திக்கொண்டே இதெல்லாம் செய்தவர்.