Description
இருளில் மறைக்கப்பட்ட பாரதத்தின் சித்திரத்தை உயிர்ப்பித்து எடுத்து வந்து அளித்ததன்மூலம் நம் பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் சுவாசமூட்டியவர் தரம்பால். பிரிட்டனின் வருகைக்குப் பிறகுதான் கல்வியின் அவசியத்தை இந்தியர்கள் உணர்ந்துகொண்டனர் என்று வாதிட்டு வந்தவர்களுக்கு தரம்பாலின் ஆய்வுகள் புது வெளிச்சத்தை அளித்தன.
கணிதம், கலை, இலக்கியம், வான சாஸ்திரம், மருத்துவம், சுரங்கத் தொழில், இரும்பு வார்ப்பு, காகிதம் தயாரித்தல், பனிக்கட்டி தயாரித்தல் என்று தொடங்கி கணக்கற்ற துறைகளில் பாரதம் முன்னணி வகித்திருந்ததை தகுந்த சான்றுகளோடு தரம்பால் நிரூபித்தார். அஹிம்சைப் போராட்டம் காந்திக்கு முன்பே இந்நிலத்தில் தோன்றிவிட்டதையும் அவர் கண்டறிந்து சொன்னார். கிராமம் எப்படி பாரதத்தின் மெய்யான ஆன்மாவாகத் திகழ்ந்தது என்பதையும் அந்தக் கிராமம் நவீனத்துவத்தின் பெயரால், அரசியல் சாசனத்தின் பெயரால் எவ்வாறு ஓரங்கட்டப்பட்டது என்பதை மிகுந்த வருத்தத்தோடு தரம்பால் பதிவு செய்தார்.
தரம்பால் எழுதிய நான்கு முக்கியமான நூல்களின் முன்னுரைகள் முதன்முதலாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தரம்பாலின் பார்வையில் பண்டைய இந்தியாவைத் தரிசிக்க விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டியாக அமையும்.