Description
தமிழக வரலாற்றில் மட்டுமல்ல தென் இந்திய வரலாற்றிலும் பாளையங்களின் இடம் முக்கியமானது. கட்டபொம்மன், ஊமைத்துரை என்று சில சாகசக் கதைகள் கடந்து, அங்கும் இங்குமாகச் சில சம்பவங்கள் கடந்து இந்தக் காலகட்டத்தை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவில்லை என்பதே உண்மை.
தமிழகத்தில் விஜயநகரப் பேரரசு ஆட்சிக்காலத்தில் எதிரிகளிடம் இருந்து நிலப்பகுதிகளைப் பாதுகாப்பதற்காகவும் அவற்றைச் சிறப்பான முறையில் நிர்வாகம் செய்வதற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு ஏற்பாடுதான் பாளையக்கார முறை. மதுரை நாயக்கர்கள் பாளையங்களைத் திட்டவட்டமாக வரையறை செய்தனர்.
பாளையக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடைய ஆட்சிமுறை எப்படி இருந்தது? எதிரிகளிடமிருந்து அவர்கள் தங்கள் மக்களை எப்படிப் பாதுகாத்தனர்? வரி வசூலித்து, கப்பம் அளிக்கும் பொறுப்பில் இருந்த பாளையக்காரர்கள் வரி கட்ட மறுத்து போர் முரசு கொட்டியது எவ்வாறு நிகழ்ந்தது? தொடர் ஆக்கிரமிப்புகளையும் அந்நியப் படையெடுப்புகளையும் வெவ்வேறு சதித்திட்டங்களையும் பாளையக்காரர்கள் எவ்வாறு எதிர்கொண்டனர்?
எளிமையாகவும் விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டுள்ள இந்நூல் தமிழகப் பாளையங்களை உயிர்ப்போடு நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.