Description
திருவள்ளுவர் யார்? கடலளவு ஆழமும் விரிவும் கொண்ட கேள்வி இது.
இந்து, சைவர், வைணவர், பௌத்தர், சமணர், கிறிஸ்தவர், ஆன்மிகவாதி, வேத விற்பன்னர், வேத மறுப்பாளர், பிராமணர், முற்போக்காளர், பொதுவுடைமைவாதி என்று தொடங்கி பல அடையாளங்கள் அவருக்கு.
சில ஏடுகளில் வள்ளுவரின் பிறப்பிடம் தேவலோகமாகவும் இன்னும் சிலவற்றில் மயிலாப்பூராகவும் இருக்கிறது. அவர் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்பதையாவது சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவிவிட்டோமா என்றால் அதுவுமில்லை. இருந்தும் பல்கலைக்கழகம், சிலை, கோட்டம், கோயில், விருது, பீடம், மாநாடு அனைத்தும் அமையப் பெற்றவராக வள்ளுவர் திகழ்கிறார். தமிழின் முகமும் தமிழரின் இதயமும் அவரே.
வள்ளுவரையும் குறளையும் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட அத்தனை ஆய்வுகளையும், பொருட்படுத்தத்தக்க அத்தனை விவாதங்களையும், அவற்றிலிருந்து உருதிரண்ட அனைத்துக் கருத்துகளையும் மாற்றுக் கருத்துகளையும் இந்நூல் திறன்பட தொகுத்து அளிக்கிறது. பரிமேலழகர், உ.வே.சா, மறைமலையடிகள், அயோத்திதாசர், மு. வரதராசனார், வையாபுரிப் பிள்ளை, கிருபானந்த வாரியார், பெரியார், அண்ணா, கருணாநிதி, ஜி.யு. போப், எல்லீஸ், கால்டுவெல் என்று வள்ளுவர் மீதும் குறள் மீதும் அக்கறை கொண்டிருந்த அனைவரும் இந்நூலில் கவனம் பெறுகிறார்கள்.
குறள் உரைகளின் வரலாறு முதல் வள்ளுவரின் உருவப்படம் உருவான வரலாறு வரை; உள்ளுர் சர்ச்சைகள் முதல் உலகளாவிய செல்வாக்கு வரை அனைத்தும் இதில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ‘தமிழ் அறிஞர்கள்’ நூலைத் தொடர்ந்து ஜனனி ரமேஷ் எழுத்தில் வெளிவரும் முக்கியமான படைப்பு.
வள்ளுவர் குறித்து ஒரு வரலாற்றுப் பெட்டகம்!