Description
மண்ணுலகின் வைகுந்தம் என ஆன்மிக அன்பர்களால் போற்றிப் புகழப்படும் திருத்தலமாகவும், எண்ணியதும் புண்ணியம் தரும் அருட்தலமாகவும் திகழ்வது ரங்கம். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மைத் தலம் எனும் பெருமை பெற்ற அத்திருத்தலத்தில் சயனக் கோலம் கொண்டு சகல உயிர்களுக்கும் அருள்புரிந்துகொண்டிருக்கிறார் அரங்கநாதர். யுக யுகங்களுக்கு முன்னால் தன்னிலிருந்து பிரம்மனைப் படைத்த பரம்பொருளான திருமால், பிரம்மாவின் தவத்தால் பிரணவாகார விமானத்துடன் சத்ய லோகத்தில் தோன்றி பின்னர் பூவுலக ரங்கத்தில் நிலைகொண்டார். சத்யலோகத்தில் காட்சி தந்த எம்பெருமான் இப்பூவுலகுக்கு எப்படி, யாரால் வந்தார், ரங்கத்தில் நிலைகொள்ளும் முன்னர் வேறு எவ்விடத்தில் அருள்பாலித்துக்கொண்டிருந்தார் என்பதை விவரித்து சக்தி விகடனில் ‘ரங்க ராஜ்ஜியம்' எனும் தலைப்பில் இந்திரா செளந்தர்ராஜன் எழுதிய முதல் பாகத்தின் தொகுப்பு இந்நூல். பிரணவாகாரப் பெருமான் மண்ணுலகுக்கு வந்தது முதல் சில நூற்றாண்டுகள் வரை அரங்கன் ஆலயம் சந்தித்த சம்பவங்கள் வரை இந்த முதல் பாகம் சொல்கிறது. ஓர் ஊழிப் பெருவெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு சில காலம் மண்ணுள் மறைந்திருந்த அரங்கன் ஆலயம் எப்படி வெளிப்பட்டது? அதன்பின் நிகழ்ந்த அரங்கனின் மகிமைகள், ரங்கம் ஆலயம் தொடர்பான நிகழ்வுகள் சரித்திரத்தில் எவ்வாறெல்லாம் பதிந்துள்ளன என்பதை தன் வசீகர எழுத்து நடையால் இந்த ரங்க ராஜ்ஜியத்தில் வடித்துத் தந்திருக்கிறார் இந்திரா செளந்தர்ராஜன். இனி அரங்கனின் அற்புதங்களை அறிந்து அவன் அருளைப் பெற வாருங்கள்