Description
குப்தர்களின் காலம் பண்டைய இந்திய வரலாற்றின் பொற்காலம் என்று பல வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படுகிறது. குப்தர்கள் ஆட்சியிலிருந்த இரண்டு நூற்றாண்டுகளில் போற்றத்தக்கப் பெரும் பாய்ச்சல்கள் இங்கே நிகழ்ந்திருக்கின்றன. நிர்வாகம், சமயம், கலை, கட்டுமானம், இலக்கியம், அறிவியல், வானியல் என்று விரிந்த தளங்களில் இந்தியா உச்சத்தைத் தொட்டது குப்தர் ஆட்சிக்காலத்தில்தான். மோதல், பகை, போர் என்று அலைக்கழிந்துகொண்டிருந்த அரசர்கள் பெரிதும் அமைதி காத்ததும் அப்போதுதான்.
பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு சீரும் சிறப்புமாகக் குப்தர்கள் ஆண்டிருக்கிறார்கள். முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர் என்று வண்ணமயமான அரசர்கள் கோலோச்சிய ராஜ்ஜியம் அது. காளிதாசர் அமரத்துவம் வாய்ந்த கவிதைகளை வடித்தார் என்றால் கணிதத்தின் கதவுகளை ஆர்யபடர் திறந்து வைத்தார். ராமாயணமும் மகாபாரதமும் பதினெட்டுப் புராணங்களும் இயற்றப்பட்டன.
நாணயங்கள், கல்வெட்டுகள், பிரதிகள் என்று விரிவான தரவுகளின் அடிப்படையில் இந்நூலை எழுதியிருக்கிறார் எஸ். கிருஷ்ணன். ‘சேரர் - சோழர் - பாண்டியர்’, தமிழ்நாட்டுப் போர்க்களங்கள்’, ‘விஜயநகரப் பேரரசு’ ஆகிய நூல்களைத் தொடர்ந்து இந்நூல் வெளிவருகிறது.