Description
மூன்றாவது சினிமா என்பது மூன்றாம் உலகின் விடுதலை சினிமா. பொழுதுபோக்கை முன்னிறுத்தும் பகாசுர நிதி மூலதன அமெரிக்க ஏகாதிபத்திய சினிமா முதல் சினிமா. அரசியல் சாரா திரை அழகியலை முதன்மைப்படுத்தும் ஐரோப்பிய சினிமா இரண்டாவது சினிமா. மூன்றாம் உலக நாடுகளின் அரசியல், சமூக விடுதலையை முன்னிறுத்துவது மூன்றாவது சினிமா. இது காலனிய எதிர்ப்பு சினிமா. வர்க்கம், இனம், மதம், பாலியல் எனச் சகலவிதமான ஒடுக்குமுறைகளையும் வேரறுக்கும் சினிமா. வன்முறையின், பசியின், போராடுதலின் அழகியலை மூன்றாவது சினிமா பேசுகிறது.
1966ஆம் ஆண்டு கியூபாவில் நடைபெற்ற ஆசிய, ஆப்ரிக்க, இலத்தீனமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் கருத்தரங்கில் இதற்கான விதை ஊன்றப்பட்டது. 1969ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த அமைப்பின் கோட்பாட்டுச் சஞ்சிகையான, 'டிரைகான்டினென்டல்' இதழில் 'மூன்றாவது சினிமாவை நோக்கி” எனும் பிரகடனத்தை அர்ஜன்டீன இயக்குனர்களான பெர்னான்டோ சொலானசும் ஆக்டோவியா கெட்டினோவும் வெளியிட்டார்கள். இந்தப் பிரகடனத்தை அடியொற்றிச் செயல்பட்ட இயக்குநர்கள் உலக சினிமாவின் முகத்தையே மாற்றினார்கள். இலத்தீனமெரிக்க அரசியல் அடையாளத்தை கியூபப் புரட்சி மாற்றியது போல, அந்தப் புரட்சியில் வேர்கொண்ட மூன்றாவது சினிமாக் கோட்பாடு அரைநூற்றாண்டு கடந்தும் உலக சினிமாவில் அலையடித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்தப் பெரும்தொகுதி ஆவணப்படுத்தியிருக்கிறது.