Description
மணிரத்னம் இயக்கிய முதல் படம் கன்னட மொழியிலான, ’பல்லவி அனுபல்லவி’. அவர் இயக்கிய இரண்டாவது படம் மலையாள மொழியிலான, ’உணரு’. மூன்றாவதாக அவர் இயக்கியது அவரது முதல் தமிழ் படமான, ’பகல்நிலவு’. முறைசாரா காதலில் துவங்கி மரபுசார் உளவியலில் சரணடைவது பல்லவி அனுபல்லவி. இடதுசாரித் தொழிற்சங்க அரசியல் குறித்த எதிர்மறை விமர்சனம் உணரு. நல்லதும் கெட்டதுமான தாதாக்களின் உளவியல், காவல்துறை அதிகாரியின் காதல், விசுவாசமான அடியாள் நாயகன் போன்றோரின் கதை பகல்நிலவு. இந்த மூன்று படங்களிலும் வெளிப்பட்ட அதே மூன்று கதைக்கருக்கள்தான் மணிரத்னத்தின் பின் வந்த, ’மௌனராகம்’, ’நாயகன்’, ’ரோஜா’, ’இருவர்’, ’அலைபாயுதே’, ’ஓகே கண்மணி’, ’ஆயுத எழுத்து’, ’குரு’, ’செக்கச்சிவந்த வானம்’ என அத்தனைப் படங்களிலும் நிறைந்திருக்கிறது. முறைசாரா காதல் சனாதன முடிவு, இடதுசாரி திராவிட இனத்தேசிய வெறுப்பிலான இந்தியப் பெருந்தேசியம், கூடார்த்தமான தாதாக்களின் உளவியல் சிக்கல் என இவை மூன்றும்தான் மணிரத்னம் சஞ்சரிக்கும் கதையுலகம். இந்த நூல் மணிரத்னத்தின் திரைப்படங்களில் இடம்பெறும் அழகியல் கலையும், விடுதலை அரசியல் வெறுப்பும் பற்றி விரிவாக ஆராய்கிறது.