Description
வரலாறு என்பது எப்போதும் அரசர்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. இந்தியாவை ஆண்ட பேரரசர்கள் யார் என்று கேட்டால் மளமளவென்று பலரை நம்மால் நினைவுகூரமுடியும். இந்திய அரசிகள் என்று வரும்போது நாம் திணற ஆரம்பித்துவிடுவோம். ஒன்றிரண்டு பெயர்களைக் கடந்து எவருடைய முகமும் நம் நினைவுக்கு வராது. ஒருவேளை அரசிகளே நம்மிடம் இல்லையோ என்றுகூட நினைக்க ஆரம்பித்துவிடுவோம். உண்மையில் பல அரசிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைக் கடந்த காலங்களில் ஆண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் வண்ணமயமானவர்கள். நம் கற்பிதங்களை உடைக்கும் வகையில் சமூகத்திலும் ஆட்சி நிர்வாகத்திலும் பல பங்களிப்புகளைச் செய்தவர்கள். அவர்களை அறிமுகப்படுத்தும் வகையிலும் வரலாற்றை நேர் செய்யும் வகையிலும் இந்நூலை எழுதியிருக்கிறார் அறிவன்.
வேலு நாச்சியார், அபக்கா சௌதா, சென்னபைரதேவி, கிட்டூர் இராணி சென்னம்மா, அகல்யாபாய் கோல்கர், தாராபாய் போன்சுலே, இலக்குமி பாயி, துர்காவதி, ருத்ரமாதேவி, ஜான்சி இராணி, மங்கம்மாள், அர்சல் மகல் என்று பலரை நாம் சந்திக்கவிருக்கிறோம். இவர்கள் வாயிலாக நம் தேசத்தின் கடந்த காலத்தை முற்றிலும் புதிய முறையில் அணுகப்போகிறோம். எளிய, இனிய தமிழில் இந்திய அரசிகளை அறிமுகப்படுத்தும் முக்கியமான படைப்பு.