Description
இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் பரதநாட்டியம் இடம்பெறுவதற்குக் காரணமாக இருந்தவரும் ‘கலாஷேத்திரா’ நடனப் பள்ளியை நிறுவியவருமான ருக்மிணி தேவி அருண்டேலின் வண்ணமயமான வாழ்க்கை வரலாறு.
*
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக மாறியிருக்க வேண்டியவர். வேண்டாம் என்று மறுக்கும் துணிவு அவரிடம் இருந்தது. உலகத் தாய் எனும் அங்கீகாரத்தை அவருக்கு வழங்க விரும்பியது தியாசஃபிகல் அமைப்பு. வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டார். ஆனால் வரலாறு இந்தக் காரணங்களுக்காகவும் சேர்த்தேதான் அவரை நினைவில் வைத்திருக்கிறது.
ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைந்துகிடந்த சதிர் ஆட்டத்தை மீட்டெடுத்து பரத நாட்டியமாக வளர்த்தெடுத்து உலகுக்கு வழங்கியவர் ருக்மிணிதேவி அருண்டேல். ஆர்வமுள்ள அனைவரும் தடையின்றிக் கற்றுக்
கொள்ளவேண்டும் எனும் விருப்பத்தின் அடிப்படையில் கலாஷேத்ரா எனும் மாபெரும் கல்வி நிறுவனத்தை அவர் கட்டியெழுப்பினார். இந்தியப் பண்பாட்டு வரலாற்றின் ஓர் அடையாளமாக இந்நிறுவனம் இன்று வளர்ந்து நிற்கிறது.
ருக்மிணிதேவியின் அசாதாரணமான வாழ்வையும் தன் பணிகளை முன்னெடுக்கவும் அவற்றில் முத்திரைப் பதிக்கவும் அவர் மேற்கொண்ட போராட்டங்களையும் எளிமையாகவும் விறுவிறுப்பாகவும் விவரிக்கிறது இந்நூல். ஓர் ஆளுமையின் கதையாக மட்டுமன்றி அவர் வாழ்ந்த காலக்கட்டத்தின் கதையாகவும் இந்நூலை உருவாக்கியிருக்கிறார் வி.ஆர். தேவிகா. இசை, நடனம், சமூகம், பெண்ணியம், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் கொண்ட அனைவரும் கொண்டாடவேண்டிய ஓர் ஆளுமை ருக்மிணிதேவி என்பதை இந்நூலை வாசிக்கும் எவரும் ஒப்புக்கொள்வர்.