Description
தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாரத வரலாற்றிலும் சோழர்கள் வகிக்கும் இடம் மகத்தானது. தென்னிந்தியா முழுவதையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து ஈடுஇணையற்ற ஒரு பொற்காலத்தை நமக்கு வழங்கியிருக்கிறார்கள் சோழர்கள்.
இன்று நினைத்தாலும் வியக்க வைக்கும் அளவுக்கு அரசியல், நிதி, நிர்வாகம், நீதிமுறை, கலை, பண்பாடு, கட்டுமானம் என்று ஒவ்வொரு துறையிலும் சோழர்கள் தனித்துவமான பங்களிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். குறிப்பாக, முதலாம் ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தமிழகம் படைபலமிக்க மாபெரும் சக்தியாக எழுந்தது. தென் இந்தியாவில் தொடங்கி தென்கிழக்கு ஆசியாவரை நீண்டு பரவியிருந்தது ஆட்சிப்பரப்பு.
பழந்தமிழ் காலம் தொட்டு நிறைவு வரையிலான சோழர்களின் நீண்ட ஆட்சிக்காலத்தின் வரலாற்றை இலக்கியம் தொடங்கி கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆவணங்கள், ஆய்வு நூல்கள் என்று சாத்தியமான அத்தனை சான்றுகளையும் திரட்டி, ஒழுங்குபடுத்தி இந்நூலைக் கட்டமைத்திருக்கிறார் நூலாசிரியர் எஸ். கிருஷ்ணன்.
தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமிதச் சின்னங்கள் உருவானதன் பின்னணி வெகு சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டுள்ளது. காத்திரமான வரலாற்று நூலாகத் திகழும் அதே நேரம், மாணவர்கள் தொடங்கி அனைவருக்குமான எளிமையான அறிமுக நூலாகவும் அமைந்திருப்பது இதன் சிறப்பு.

