Description
கவிஞர் மணிகண்டராசு, இராஜேஸ்வரி பெற்றெடுத்த தங்கநிகர் தவப்புதல்வர்கள் ம.குசனும் ம.லவனும் தமிழால் இணைவோம் உலகத் தமிழ்ப் பேரியக்கம் வாயிலாக இந்தச் சொல்லேர் உழவர்களை அறிந்தேன். பேச்சு, கவிதை, கட்டுரை, கருத்தரங்கு, பட்டிமன்றம் அத்தனையிலும் பாங்குடன் தங்களை ஈடுபடுத்தி அத்தனையிலும் வெற்றி உலா வருவதை நானறிவேன். சென்ற இடமெல்லாம் வென்று பரிசுகளை அள்ளிவந்திருக்கிறார்கள். இருவரும் இணைந்து "ஒரு கருவில் இரு உயிர்கள்" என்று கவிப் பூமாலை தொடுத்துத் தமிழ்த் தாயின் கழுத்தில் சூடியுள்ளார்கள். எது கவிதை என்று சொல்கின்றபோது, "எண்ணம் துடிக்கும் - அவன் இதயம் பாடும் கனவுகள் வெடிக்கும் கவிதைகள் மலரும் கண்ணீர் வடிக்கும் சொல்நீர் சுரக்கும்" என்றார் அறிஞர் அண்ணா. இக்கவிதை நூலைப் படிக்கின்றபோது அவர்களின் எண்ணத் துடிப்பையும் இதயக் கனவுகளையும் கண்டேன். படித்துப் பாருங்கள் அவர்களின் கவிதைகள் உங்களோடு கை குலுக்கும். குசனும் லவனும் அனைத்துத் துறைகளிலும் சிகரம் தொட வாழ்த்துகிறேன். அ.சுப்ரமணியன் தலைமைச் செயலாளர் தமிழால் இணைவோம் உலகத் தமிழ்ப் பேரியக்கம்