Description
முதல்முறையாக வாய்ப்பு கிடைத்து, சொல்ல முடியாத விஷயங்களைச் சொல்ல முனையும்போது, நிச்சயம் அது சிரமமான விஷயம்தான். சாமானியப் பெண்கள் இதுபோல் எழுதி அனுப்பி இருப்பதை நாம் மிக முக்கியமாகப் பார்க்க வேண்டியுள்ளது. 'எனக்கு ஏன் இப்படி நடந்தது?’ என்று அந்த எழுத்திலேயே சோகம், தனிமை உணர்வு, எப்படி இதை வெளியே சொல்வது என்னும் ஆற்றாமை போன்றவை தெரிகின்றன. பல நேரங்களில் பேசமுடியாத இதுபோன்ற விஷயங்களில் பெண்கள் சொல்வதைக் கேட்கக்கூடிய பக்குவமோ, சூழலோ நம் சமுதாயத்தில் இல்லை. ஆகவே, இதை வாக்குமூலமாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சட்டரீதியான மாற்றம் என்பது சட்டத்தில் தானாக வரும் மாற்றம் அல்ல. அதற்குப் பின்னால் விவாதங்கள். உரையாடல்கள், வேலைகள், தகவல் திரட்டுதல், பெண்கள் ஒருவருடன் இன்னொருவர் பேசுவது போன்ற அனுபவங்கள் இருக்கின்றன. 'பாலியல் வன்புணர்வை எப்படி நீ சகித்துக்கொள்ள முடியும்? அது இன்னொரு பெண்ணுக்கு நடக்கிறது. உனக்கு நடக்கவில்லை. ஆனால், அது வரைக்கும் நீ சும்மா இருக்காதே. எத்தனையோ பெண்களுக்கு நடக்கிறது, நீ அமைதியாக இருக்க முடியாது' என்கிற விழிப்புணர்வைத் தருவது (consciousness raising) அவசியம்.
* வ.கீதா