Description
பன்னிரண்டாம் நூற்றாண்டில் கன்னட இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவையாக வசனங்கள் மதிக்கப்படுகின்றன. இலக்கியத்தில் அதுவரை வழக்கிலிருந்த உள்ளடக்கத்தை வசனங்கள் தலைகீழாகக் கவிழ்த்தன. உயர்குடி வாழ்க்கைச் சித்தரிப்பும் கற்பனையும் புலமை இறுக்கமும் கொண்ட கவிதைகளிருந்து மாறுபட்டு அடித்தள வாழ்க்கைக் கூறுகளும் எதார்த்தமும் இம்மை இயல்பும் மிளிரும் வசனங்கள் உருவாக்கப்பட்டன. மதக்கோட்பாட்டை விவரிக்கும் அல்லது விளக்கும் சாதனமாக அல்லாமல் அதை விமர்சிக்கும் கருவியாயின வசனங்கள். முந்தைய கவிதைகளும் காவியங்களும் திளைக்கத் திளைக்க மூழ்கியிருந்த தெய்வீகக் கற்பனைகளின் இடத்தில் அன்றாட உலகியல் நடப்புகளை வைத்தன. இதன் விளைவாக, சமுதாயத்தின் எல்லாத் தட்டு மனிதர்களும் அவர்களது வாழ்வும் செய்கைகளும் கவிப்பொருளாயின. எல்லாத் தரப்பினரின் பட்டறிவும் தன்னுணர்வும் கவிதையாயின. செருப்புத் தைப்பவர். இரவலர்முதல் அரசகுடும்பத்தினர்வரையான சகலரின் வாழ்வும் பொருள் பெற்றன.