Description
மார்க்சியமும் இலக்கிய விமர்சனமும் என்ற இந்த நூல் கலை இலக்கிய விமர்சனத் தளத்தில் மார்க்சியக் கண்ணோட்டத்தை புரிந்து கொள்ளும் வகையிலும் மார்க்சிய விமர்சன அணுகுமுறையை கைக்கொள்ளும் விதத்திலும் இங்கிலாந்தின் இலக்கியக் கோட்பாட்டாளர் டெர்ரி ஈகிள்டன் அவர்களால் எழுதப்பட்டது. இந்த நூல் எழுதப்பட்ட காலகட்டம் மிக முக்கியமானது. ஒரு புறம் பின்நவீனத்தப் போக்குகள் மறுபுறம் கலை இலக்கியத் தூய்மைவாத விமர்சனங்களால் மார்க்சிய இலக்கிய விமர்சன முறைமை தாக்குதலுக்கு உள்ளான காலத்தில் மார்க்சிய விமர்சன மரபின் செழுமையையும், வளத்தையும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இதை எழுதிய 1976 காலகட்டத்தில் டெர்ரி ஈகிள்டன் ஆக்ஸ்ஃபெர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். தற்போது லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறையின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றுகிறார். அவருடைய கோட்பாட்டுக்குப் பின் நூல் 60-கள் தொடங்கி 90-கள் வரை செல்வாக்கு பெற்றிருந்த கோட்பாடுகளின் பொற்காலம் 21-ஆம் நூற்றாண்டில் நீர்த்துப் போனதை அக்கறையுடன் விவாதிக்கிறது. அவற்றின் இடத்தை பால், இன, பின்காலனிய, தேசிய, புலப்பெயர்வு, தன்பாலின அடையாளங்கள், வாழ்முறை மற்றும் பொழுதுபோக்கு கலாச்சாரம் ஆகியவை பறித்துக் கொண்டதை கண்ணுறுகிறார். கோட்பாடுகளில் அரசியலையும், அற மதிப்பீடுகளையும் மறுபடியும் ஆழமாக ஊன்றுவதன் மூலம் இழந்த மதிப்பை கோட்பாடுகள் பெற முடியும் என்கிறார். இந்த மொழியாக்கத்தை அந்த நோக்கத்துக்கு உதவும் ஒரு சிறு முயற்சியாக பார்க்கலாம். கலை இலக்கியப் படைப்புகளை அக மனப்பதிவுகளை கடந்து அணுக விரும்புவோருக்கு இந்த நூல் சிறந்ததொரு கையேடாக இருக்கும்.
இந்த நூலின் மொழிபெயர்ப்பாளர் த. ராஜாஜி, ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி, ஆழ்வார்குறிச்சி ஆங்கிலத்துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார். கலை, இலக்கியம், கோட்பாடுகள் சார்ந்து கட்டுரைகள், மதிப்புரைகள் மற்றும் மொழிபெயர்ப்புகளை செய்து வருகிறார்.

