Description
"நான் ஒரு தமிழ் மாணவன், அதுவே எனது அடையாளம்" என்று கூறும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தில் 1958இல் பிறந்தவர், இந்திய ஆட்சிப் பணித் தேர்வை முதன்முறையாக தமிழிலேயே எழுதி 1984இல் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்ற ஒரே தமிழ் இலக்கிய மாணவர்.
இந்தியவியல், திராவிடவியல் ஆய்வாளரான இவர், 'சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஒடிசா மாநில அரசில் பல முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ள பாலகிருஷ்ணன், இந்தியத் தேர்தல் ஆணையத்தில் துணைத் தேர்தல் ஆணையராக இருமுறை பணியாற்றியுள்ளார். இந்திய ஆட்சிப் பணியில் 34 ஆண்டுகள் பணியாற்றி 2018-ல் ஓய்வுபெற்றார். ஓய்விற்குப் பின்னர் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்று ஆறு ஆண்டுகள் பணியாற்றி 2024இல் தமிழ்நாடு திரும்பியுள்ளார்.
'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்', 'Journey of a Civilization: Indus to Vaigai', 'ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை'. ஆகியவை இவரது ஆய்வு நூல்கள். 'அன்புள்ள அம்மா', 'சிறகுக்குள் வானம்', 'நாட்டுக்குறள்', 'பன்மாயக் கள்வன்', 'இரண்டாம் சுற்று'. 'குன்றென நிமிர்ந்து நில்', 'கடவுள் ஆயினும் ஆக', 'அணிநடை எருமை', 'ஓர் ஏர் உழவன்', 'தமிழ் நெடுஞ்சாலை', 'இப்படி ஒரு தீயா!' ஆகியவை இவரின் கவிதை மற்றும் கட்டுரை நூல்கள்.
இவர் தற்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் செயல்படுகிறார்.
சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய முதல் நூல், ‘அன்புள்ள அம்மா’ என்ற கவிதை நூலாகும்.