Description
கவிதைக் கலை பற்றிய மேலைநாட்டுக் கவிஞர்களின் பட்டறிவுச் சிந்தனைகளையும் விமர்சகர்களின் கவிதைக் கோட்பாடு களையும், திறனாய்வாளர் ரா.ஸ்ரீ,தேசிகன் இந்நூலில் சிறப்பாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். ஆங்கிலப் பேராசிரியரான இவர், புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியவர் என்ற முறையில் நவீன இலக்கிய உலகில் நன்கு அறிமுகம் பெற்றிருந்தவர். தமிழில் அபூர்வமாகவே மரபும் நவீனமும் தமிழ் இலக்கியமும் உலக இலக்கியமும் தெரிந்த திறனாய்வாளர்கள் தென்பட்டிருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் இவரே எனலாம். கூடவே இவருக்குத் தத்துவமும் இசையும் தெரியும் என்பது மேலாதிகச் சிறப்பு.
புதுக்கவிதையின் புதுமலர்ச்சிக்குக் காரணமாய் அமைந்த சி.சு.செல்லப்பாவின் 'எழுத்து' என்ற தமிழின் முதல் சிறுபத் திரிகையில், 'கவிஞர்கள் கண்ட கவிதைத் தத்துவம்' என்ற தலைப்பில், எலியட் எஸ்ரா பவுண்ட், ஏட்ஸ், ஆடன், ஸ்பெண்டர், மல்லார்மே, பால் வேலரி போன்ற கவிஞர்களின் கவிதைக்கலைக் கருத்துருக்களை அலசி ஆராய்ந்து (1962) திறனாய்வுக் கட்டுரைத்தொடர் ஒன்றை எழுதினார் ரா.ஸ்ரீ. தேசிகன். அப்போதுதான் மலர்ந்து வந்த புதுக்கவிதைப் பயிருக்கு இவை உரமூட்டின. பின்பு இக் கட்டுரைகளையும் இதற்கு முன் அவர் எழுதியிருந்த பிளேட்டோ முதல் ரில்கே வரையானோரின் கவிதையியல் கொள்கைகளையும் சேர்த்து, கவிதைக்கலை' (1966) என்ற பெயரில் இரு தொகுதிகளாக வெளியிட்டார்.
மேலைநாட்டுப் புனைகதை மேதைகளின் படைப்புகளைத் திறனாய்ந்து 'கற்பனைச் சிறகு' நூலையும் மேலைநாட்டுத் தத்துவப் பேரறிஞர்களின் கோட்பாடுகளையும் வரலாற்று வளர்ச்சியையும் விளக்கியுரைக்கும் 'மேலைநாட்டுத் தத்துவம்" என்ற நூலையும் படைத்திருக்கிறார்.
ரா.ஸ்ரீ. தேசிகளின் 'மேலை நாட்டுத் தத்துவம்' என்ற மெய்யியல் நூலும், 'கவிதையின் மெய்யியல் (கவிதைக்கலை), 'இலக்கியத்தின் மெய்யியல்' (கற்பனைச்சிறகு) ஆகிய இலக்கியத் தத்துவ நூல்களும், பரிசல் வெளியீடுகளாக இப்போது மறுபிரசுரம் பெற்றுள்ளன. இவை தமிழ் எழுத்தாளர்களுக்கும் இலக்கிய வாசகர்களுக்கும் கையேடுகளாக விளங்கக் கூடியவை என்பதில் மிகையொன்றும் இல்லை.