Description
பவபூதி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வடமொழி நாடகாசிரியர், வால்மீகியின் முடிவை இவர் ஏற்றிருக்கவில்லை. உத்தர ராம சரிதம்' என்ற நாடகத்தின் வாயிலாக, அந்த முடிவை மாற்றியமைத்தது மட்டுமின்றி, தம்மை உறுத்தும் வேறு சில செய்திகளையும் வெளியிட்டிருக்கிறார். சம்பூகனைக் கொலை செய்யுமுன் இராமர், 'வலதுகரமே, நீ வேதியன் மகனை வாழ்விக்க, சூத்திர முனிவர் மீது உடைவாளை வீசுவாய்? நிறை சூலி சீதையை வனமனுப்பியவன் அங்கமல்லவா? உனக்கு கருணை ஏது?' என்று நெஞ்சோடு கடிந்து கொண்டதாக எழுதியுள்ளார். அது மட்டுமன்று; வால்மீகி ஆசிரமத்துச் சீடர்கள் நகைச்சுவை மேலிட ருஷி - தாடிகள் வரும்போது, பசுங்கன்றுகள் விழுங்கப்படுகின்றன என்று பேசிக் கொள்வதாகச் சித்திரிக்கின்றனர். அவருடைய நாடகத்தில் அந்தண முனி ஆதிக்கங்களுக்கு எதிரான குரல் இழையோடுகிறது.
இவருடைய நாடக முடிவில் சீதையைப் பூமி விழுங்கவில்லை. மன்னருடன் தாயும் மைந்தர்களும் சேர்ந்து விடுகின்றனர். சீதை உயிர்க்குலத்தை வாழ வைக்கும் செல்வி. அஹிம்சை வடிவானவள். இராமன் வனமேகும் போது வில்லும் அம்பும் கொண்டு வருவது எதற்கு என்று வினவிய பெருமாட்டி. எனது இந்தப் பார்வையே சீதையை ஒரு புதிய வடிவில் இசைக்கிறது. இவள் தன் மவுனத்தால் இராமனைத் தலைகுனியச் செய்கிறாள். அஹிம்சையின் ஆற்றல் சொல்லற்கரியதாகும். கடப்பாரைக்கு நெக்குவிடாத பாறையும் பசுமரத்து வேருக்குப் பிளவு படும் அன்றோ? சீதையின் ஆற்றல் ஆரவாரமற்றது. அது ஆழத்தில் பாய்ந்து தீமையைச் சுட்டெரிக்கவல்லது. என் சீதை இத்தகைய ஆற்றலை அகத்தே கொண்டு வனத்தையே அன்பு மயமாக ஆளுகை செய்யும் தாய். அவள் பூமிக்குள் செல்லவில்லை. அவள் மைந்தர்களும் அரசன் பின் செல்லவில்லை. இந்தப் புனைவு ஏற்கெனவே நிலை நிறுத்தப்பட்ட பிம்பங்களைத் தகர்க்கலாம். அப்படியானால் நான் என் நோக்கில் வெற்றி பெற்றதாகக் கருதுவேன்.