Description
ரா.ஸ்ரீ. தேசிகனின் இந்த நூல், பிளேட்டோ முதலிய கிரேக்க, ரோமானியச் செவ்ளவியல் தத்துவவாதிகளைத் தொடர்ந்த புனித அகஸ்டின், பிரான்சிஸ் அசிஸி முதலிய கிறிஸ்தவ இறையியலாளர்கள் முதல், இடைக்கால மறுமலர்ச்சி இயக்கத்து பேக்கன் முதலிய தத்துவவாதிகள் வரை விரிவாக எடுத்து உரைக்கிறது.
சிறப்பாக மேலை-கீழைத் தத்துவத்தை மேதமையுடன் தமிழில் விளக்கிய நூல்களாக, ஆங்கில, வடமொழி மொழிபெயர்ப்புகளாகவும் தமிழிலேயே எழுதப்பெற்றவைகளாகவும் ஹிரியண்ணா, எஸ், ராதாகிருஷ்ணன், அப்புள்ளாச்சாரி, வி.ஏ. தேவசேனாபதி, டி.எம்.பி. மகாதேவன், கி. லட்சுமணன், முப்பால் மணி, சேலம் ஆர். குப்புசாமி, நோயல் ஜோசப் இருதயராஜ் போன்றோரின் நூல்களும் கட்டுரைகளும் கிடைக்கின்றன. அந்த வரிசையில் சேர்த்து எண்ணத்தக்க முக்கியமான நூல் ரா.ஸ்ரீ.தேசிகனின் இந்தப் படைப்பு.
ஆங்கிலப் பேராசிரியரான இவர், புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியவர் என்ற முறையில் நவீன இலக்கிய உலகில் நன்கு அறிமுகம் பெற்றிருந்தவர். தமிழில் அபூர்வமாகவே மரபும் நவீனமும் தமிழ் இலக்கியமும் உலக இலக்கியமும் தெரிந்த திறனாய்வாளர்கள் தென்பட்டிருக்கிறார்கள், அவர்களில் முதன்மையானவர் இவரே எனலாம். கூடவே இவருக்குத் தத்துவமும் இசையும் தெரியும் என்பது மேலாதிகச் சிறப்பு.
தமிழ்ப் புதுக்கவிதையின் புதுமலர்ச்சிக்குக் காரணமாய் அமைந்த 'கவிதைக்கலை'க் கட்டுரைகளை எழுதிய ரா.ஸ்ரீ. தேசிகனின் இலக்கியத் தத்துவ நூல்கள், கவிதையின் மெய்யியல்' 'இலக்கியத்தின் மெய்யியல்' என்ற தலைப்பில் பரிசல் வெளியீடு களாக இப்போது மறுபிரசுரம் பெற்றுள்ளன. இவ்வரிசையில் மேலைத் தத்துவம் பற்றிய இந்நூலும் முதன்மை பெறுகிறது. இவை தமிழ் எழுத்தாளர்களுக்கும் இலக்கிய வாசகர்களுக்கும் கையேடுகளாக விளங்கக் கூடியவை என்பதில் மிகையொன்றும் இல்லை.