Description
அரை நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை விதைந்தவர் நாவலர் நெடுஞ்செழியன் 'நாவலர்' என்று அழைக்கப்படுவதற்கு முன்னால் 'இனந்தாடி' நெடுஞ்செழியன் என்பதுதான் அவர் பெயர்! கருகருவென கட்டை தாடி வைத்திருப்பார் பாதிரியார்கள் போடுவது போல, அங்கியை கருப்பு நிறத்தில் அணிந்து வருவார். அன்றைய தலைவர்களில் அதிக உயரம். அவருக்காகவே மேடையை உயரமாக போட்டார்கள், 'நான் நின்று, என் கையை மேலே தூக்கினால் இடிக்காத அளவுக்கு மேடை போடுங்கள்' என்று கட்டளை போட்டார்.
மகாகவி பாரதி பாடல்களை தமிழ்நாட்டு மேடைகளில் அதிகம் ஒலித்தது தோழர் ஜீவா என்றால் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்களை அதிகம் ஒளித்தவர் நாவலர் மேடைகளில் பாடல்களை மனப்பாடமாக ஒப்பித்து கைதட்டல்களை அள்ளும் பாணியை அறிமுகம் செய்தவர் நாவலர்.
'வீழச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் - என்று அவர் சொல்லும் போது எழுச்சி பிறக்கும். 'விசை ஓடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்'- என்று அவர் சொல்லும் போது வன்மை பிறக்கும் "என் கவிதைகளை நெடுஞ்செழியனைப் போலத்தான் உணர்ச்சியாய் சொல்லவேண்டும்' என்றார் பாவேந்தர். பாவேந்தரின் புகழ்பெற்ற கவிதைகள் மட்டுமல்ல. கவனம் பெறாத கவிதைகளையும் மேடையில் சரளமாகக் கையாண்டார் நாவலர். தென்றலையும் தமிழையும் ஒப்பிட்டு பாவேந்தர் எழுதிய கவிதையை மேடையில் அரைமணி நேரம் விளக்குவார் நாவார். தென்றலும் தமிழும் நாவலரின் குரலும் நழுவும் அப்போது " புறம்பாடும்போது முகஞ்சிவக்கும்"! போர் முடிந்து அகம்பாடும் போதில் அகங்குழையும் என்பார் கவியரசு கண்ணதாசன். அதை இந்நூலில் உணரலாம்.
பாவேந்தர் குறித்த தனித்தனி ஆய்வு நூல்கள் அதிகம். ஆனால் அவர் குறித்த முழுமையான நூல் இது. நாவலரின் கவிக் காதலர் தான் பாவேந்தர். சொல்லவா வேண்டும்? நாவலர் பாவேந்தர் கொள்கைக் காதலை இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் பார்க்கலாம்.
-ப. திருமாவேலன்