Description
Oxygen Manifesto: A Battle for the Environment என்னும் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு. இன்றைய தேதியில் உலகம் முழுவதையும் கவ்விப் பிடித்திருக்கும் ஒரு மாபெரும் அபாயம் உண்டென்றால் அது சுற்றுச்சூழல் சீர்கேடுதான். மனிதகுலம் ஒன்றுசேர்ந்து தொடுக்கவேண்டிய ஒரே போர் இந்தச் சீர்கேட்டுக்கு எதிரான போர்தான். அந்தப் போரை முன்னெடுப்பதற்கான ஒரு வலிமையான ஆயுதம் இந்தப் படைப்பு. சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் போராட்டத்தில் எளிய மக்கள் சக்தியானது வலிமை மிகுந்த அதிகார மையங்களை எதிர்த்து எப்படி வெற்றி பெறுகிறது என்பதை விவரிக்கும் சுவாரசியமான நாவல் இது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழிடங்களைச் சீரமைத்தல், களப்போராட்டங்கள், மையம் அழிக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கவேண்டிய அவசியத்தை இந்நாவல் உணர்த்துகிறது. சுற்றுச்சூழல் சீர்கேடு, மனிதர்களின் நலனை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட செயல்பாடுகளின் தாக்கம் இரண்டும் அழுத்தமாக கவனம் பெறுகின்றன. செல்வத்தைப் பெருக்குதல், வளர்ச்சி ஆகிய செயல்பாடுகளின் பின்னாலிருக்கும் அபாயங்கள் அம்பலப்படுத்தப்படுகிறது. சுற்றுச் சூழல் மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி பற்றி இந்த நாவல் விவரிக்கிறது. மாமிசம் மட்டுமல்ல பால் பொருட்களைக்கூடத் தவிர்க்க வேண்டியது அவசியம் என்கிறார் நூலாசிரியர். நாம் பயன்படுத்தும் பொருட்களின் கார்பன் வெளியீடு, நீர் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் வரி விதிக்கவேண்டியதன் அவசியத்தையும் முன்வைக்கிறார். நூலாசிரியர் Dr. அதுல்ய மிஸ்ரா உயர் நிலை ஐ.ஏ.எஸ் அதிகாரி. தமிழகத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் தலைமைச் செயலராகப் பணிபுரிகிறார். மனித குலத்தின் எதிர்காலம் பற்றி அக்கறைகொண்ட அனைவரும் கட்டாயம் படித்தாகவேண்டிய அருமையான நூல்.