Description
சிக்கனம் சேமிப்பு முதலீடு
சம்பாதிக்கத் தெரியும் சேமிக்கத் தெரியுமா? ஒவ்வொருவருக்குமான அற்புதமான நிதி வழிகாட்டி. அதிக வருமானம் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. சிக்கனத்தைக் கடைபிடித்து நிறைய சேமிக்கவேண்டும். சாமர்த்தியமாக முதலீடுகள் செய்யவேண்டும். கேட்பதற்கு மிகவும் எளிமையான யோசனைகளாகத் தோன்றும். ஆனால் நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கும்போதுதான் ஆயிரம் சந்தேகங்கள் முளைக்கும். செலவுகள் ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டிருக்கும்போது சிக்கனத்தைக் கடைபிடிப்பது எப்படி? வீட்டுக்கடனும் வண்டிக்கடனும் வங்கிக்கடனும் போட்டிப்போடும்போது சேமிப்பு எப்படிச் சாத்தியப்படும்? முதலீடு குறித்து எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எதில் முதலீடு செய்வது? சீட்டுக் கட்டுவது பாதுகாப்பானதா? பங்குச்சந்தையில் பணம் போடலாமா? தங்கம் வாங்குவது நல்ல சேமிப்பு முறையா? அல்லது காப்பீடு எடுக்கவேண்டுமா? நிர்வாகவியல் குருவும் பங்குச்சந்தை நிபுணருமான சோம. வள்ளியப்பன் இந்நூலில் அளிக்கும் யோசனைகள் நம் அச்சங்களைப் போக்கி, குழப்பங்களை விளக்கி, சரியான திசையில் நம்மை வழிநடத்துகிறது. எளிய நடையில் எழுதப்பட்டுள்ள ஓர் அருமையான பொருளாதார வழிகாட்டி இது.
பணம் சில ரகசியங்கள்
எதற்குப் பணம் சம்பாதிக்கவேண்டும்? எவ்வளவு சம்பாதிக்கவேண்டும்? சம்பாதித்ததை என்ன செய்யவேண்டும்? எளிமையாகத் தோன்றினாலும் இந்த மூன்று கேள்விகளுக்கு விடையளிப்பது கடினம். ஆயிரம் வாசல்கள் வழியாக உள்ளே வருவதற்கும் இன்னும் ஆயிரம் வாசல்கள் வழியே வெளியில் செல்லவும் பணம் தயாராக இருக்கிறது. எந்தெந்த கதவுகளைத் திறந்துவைக்கவேண்டும்? எவற்றையெல்லாம் மூடி வைக்கவேண்டும்? பணம் ஒரு கருவி மட்டுமே. அது வாழ்க்கைக்கு அவசியம். ஆனால் வாழ்க்கை என்பது அது மட்டுமேயல்ல என்கிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன். சரியான இலக்குகளை அமைத்துக்கொள்ளாவிட்டால் பணம் நம்மை, நம் பணி வாழ்வை, நம் குடும்ப உறவுகளை, நம் எதிர்காலக் கனவுகளைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். பங்குச்சந்தை, சுய-முன்னேற்றம், நிர்வாகவியல் என்று பல துறைகளில் இயங்கிவரும் சோம. வள்ளியப்பனின் இந்நூல் பணம் குறித்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கியமான ரகசியங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறது.
பணமே ஓடி வா
சம்பாதிக்கத் தெரிந்த அளவுக்குச் சம்பாதித்த பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை பலருக்கும். இனியாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றுகூட நினைப்பதில்லை. இதில் படித்தவர் படிக்காதவர், உயர் பதவியில் இருப்பவர் சாதாரண ஊழியர் போன்ற வேறுபாடுகள் ஏதுமில்லை.நிஜத்தில் பணம் சம்பாதிப்பது அத்தனை கஷ்டமான விஷயமே கிடையாது. நம்மிடம் இருக்கும் சிறு அளவு பணமே பெரும் பணத்தைச் சம்பாதித்துவிடும். அதற்கான வழிகளை எளிமையாகச் சொல்லும் புத்தகம்தான் ‘பணமே ஓடி வா’.‘அள்ள அள்ளப் பணம்’ என்கிற பங்குச்சந்தை குறித்த புத்தக வரிசை எழுதி விற்பனையில் சாதனை படைத்த நூலாசிரியர் சோம.வள்ளியப்பன் குமுதத்தில் தொடராக எழுதிய நூல் இது. வாசகர்களால் பெரிதும் புகழப்பட்ட இப்புத்தகம் கால மாற்றத்துக்கு ஏற்ப சில புள்ளிவிவரங்கள், தகவல்கள், பின் இணைப்புகள் சேர்த்து, மேலும் சிறப்பாக உருவாகியிருக்கிறது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் பணம் உங்களைத் தேடி ஓடிவர இப்புத்தகம் உங்கள் பையில் இருந்தால் போதும்.