Description
ஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன. இங்கே கால் பதித்தவர்களில் கறை படாமல் இறுதிவரை இருந்தவர்கள் வெகு சொற்பமானவர்கள்தான். அவர்களில் காமராஜர் முதன்மையானவர்.இப்போது வாசித்தாலும் வியப்பளிக்கக்கூடியது அவர் வாழ்க்கை. காமராஜர் அளவுக்கு மக்களை மெய்யான அக்கறையுடன் நேசித்த, மதித்த இன்னொரு தலைவர் இன்றுவரை இங்கே தோன்றவில்லை. சாதி, மதம், கட்சி அபிமானம் அனைத்தையும் கடந்து இன்றுவரை அவர் மக்கள் தலைவராக நீடிப்பதற்குக் காரணம் தமிழகத்து மக்கள் அவர்மீது கொண்டிருக்கும் அசைக்கமுடியாத நேசம்தான்.தூய்மையின் அடையாளமாக, எளிமைக்கு ஓர் உதாரணமாக, எடுத்த காரியத்தை உத்வேகத்துடன் செய்துமுடிக்கும் திறன் பெற்றவராக காமராஜர் இன்று நினைவுகூரப்படுகிறார். இந்திய அளவில் கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதற்கான அடித்தளத்தை அவர்தான் உருவாக்கிக்கொடுத்தார். தொழில் வளம், உள்கட்டுமானம், பொதுச்சேவைகள், மருத்துவம் என்று அவர் தடம்பதித்த துறைகள் ஏராளம். தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவிலும் ஓர் தீர்மானகரமான அரசியல் சக்தியாக காமராஜர் திகழ்ந்தார்.கட்டுக்கோப்பான முறையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் காமராஜரின் அசாத்தியமான வாழ்வையும் அவருடைய அரசியல் பங்களிப்பையும் எளிமையாக அறிமுகம் செய்துவைக்கிறது. காமராஜர் ஆட்சி எப்படி இருந்தது என்பதையும் மீண்டும் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவோம் என்று இன்றும் கட்சிகள் இங்கே முழங்கிக்கொண்டிருப்பது ஏன் என்பதையும் இதிலிருந்து ஒருவர் அறியமுடியும்.