Description
தினை, சாமை, கம்பு, வரகு போன்ற சிறுதானியங்கள்தான் ஒரு காலத்தில் தமிழர்களின் உணவாகத் திகழ்ந்தன. நம் முன்னோர்கள் எல்லாம் தெம்பும் திடகாத்திரமுமாக நோய் நொடி அண்டாமல் வாழ்ந்தார்கள் என்றால் அவர்களது வாழ்க்கை முறையில் இடம் பெற்ற சிறுதானிய உணவு முறைகளும் அதற்கு ஒரு காரணம். ஆனால் காலப்போக்கில் இந்த உணவுப் பழக்கம் அலட்சியப்படுத்தப்பட்டது.அதற்குப் பதில் புதுப் புது உணவு வகைகள், மூலைக்கு மூலை ஹோட்டல்கள், பிட்சா, பேக்கரி ஐட்டங்கள் என்று கண்டதையும் ஆசை ஆசையாகச் சாப்பிட்டு கொழுப்பு, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய் என்று பல்வேறு நோய்களுக்கு ஆளான பிறகு, இப்போது ஞானோதயம் பிறந்திருக்கிறது. நமது உடலைப் பாதுகாக்க சிறுதானிய உணவுமுறைதான் ஒரே வழி என்கிற உண்மை ஊர்ஜிதமாகி இருக்கிறது. சிறு தானியங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. சிறுதானியங்களைச் சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, கொழுப்புச் சத்து குறைகிறது, உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.ஆனால் எப்படிச் சமைப்பது? சிறுதானியங்களைக் கொண்டு விதம்விதமாக சுலபமாக, சுவையாக சமைத்துச் சாப்பிட பலவகையான சமையல் குறிப்புகளை இந்தப் புத்தகத்தில் அள்ளித் தந்திருக்கிறார் சமையல் நிபுணர் தீபா சேகர். இவர் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சிகளை வழங்கிப் பாராட்டுகளைப் பெற்றவர். சிறுதானிய இனிப்பு வகைகள், சாத வகைகள், குழம்புகள், சிற்றுண்டிகள், சூப், ரசங்கள் என்று ரகம் ரகமாக 100 சமையல் குறிப்புகள் கொண்ட இந்தப் புத்தகம் உங்கள் கையில் இருந்தால் சிறுதானிய சமையலின் எக்ஸ்பர்ட் நீங்கள்தான். சமைத்து அசத்துங்கள். பாராட்டுகளை அள்ளிக் குவியுங்கள்இனி உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் உங்கள் கைகளில்.