Description
பிரிட்டனில் மார்கரெட் தாட்சர் பிரதமராக இருந்த எண்பதுகள்தான் ஷகி பெய்ன் நாவலின் காலகட்டம். பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு மானியத்தில் ஸ்காட்லாந்தில் இயங்கிவரும் நிறுவனங்களை தாட்சர் மூடிவிட்டார். ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் நடுத்தெருவில் நின்றார்கள். குடும்பங்கள் சிதையத் தொடங்கின. தொழிலாளர் வர்க்கம் பெரும் சீரழிவுக்குள்ளாகியது.
லாப நஷ்டக் கணக்கு பார்த்துச் செயல்படும் முதலாளித்துவ அரசாங்கங்கள் அடித்தட்டு மக்களைப் பொருட்டாகக் கருதுவதில்லை என்பதற்கான இலக்கிய சாட்சியங்களில் ஒன்று டக்ளஸ் ஸ்டூவர்ட்டின் ‘ஷகி பெய்ன்.’ இந்தப் பிரச்சினையின் பின்னணியில் ஷகி பெயின் என்னும் இளைஞனையும் அவன் குடும்பத்தையும் சுற்றி இந்த நாவல் வளர்கிறது.
மூன்றாம் பாலினத்தவர், தற்பாலுணர்ச்சியர்கள், LGBTIQA+ பற்றிய நுட்பமான சித்தரிப்புகளும் இந்த நாவலில் அழுத்தமாக இடம்பெற்றுள்ளன. எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத பாசப் பிணைப்பு கொண்ட தாய்-மகன் உறவும் இந்த நாவலின் சிறப்பம்சங்களில் ஒன்று.
நாவலாசிரியரின் குரல் வாசகரின் இதயத்தைத் துளைப்பதற்கு காரணம் அதன் உண்மைத்தன்மையும் வீரியமும்தான்.