Description
1855, பிப்ரவரி, 19-இல் பிறந்த உ.வே.சா. அவர்கள் 87 ஆண்டுகாலம் வாழ்ந்து மறைந்திருக்கிறார். இந்த நெடும் வாழ்க்கையில் ஆசிரியர், நூலாசிரியர்,
பதிப்பாசிரியர், உரையாசிரியர் என்ற பல்வேறு நிலைகளில் சிறந்துவிளங்கிப் பெருமை பெற்றிருக்கிறார்.
உ.வே.சா.அவர்கள் சங்க இலக்கியங்கள். காப்பியங்கள்,சிற்றிலக்கியங்கள், இலக்கணங்கள் எனப் பல்வேறு வகைப்பட்ட தமிழ் நூல்களைத் தேடிப்பெறுதலிலும், அவற்றை ஆராய்ந்து செம்மையாகப்பதிப்பித்தலிலும் தம் வாழ்நாளைச் செலவிட்டவர். எனவே அவரது இந்த நாட்குறிப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றுக்குக் கூடுதலான வளமும் உறுதிப்பாடும் தருவதாக அமையும். மேலும், அவர் ஏடுகளைத் தொகுத்திட்ட வரலாற்றுக்குத் தெளிவான ஓர் ஆவணத்தை இந்த நாட்குறிப்பின் வழிப்பெறலாம்.
இந்த நாட்குறிப்பில் அவரோடு பழகிய தமிழறிஞர்கள், சான்றோர்கள் பற்றிய செய்திகள், அவர் செய்த தமிழ்ப் பணிகள், அவரது வாழ்க்கை நிகழ்வுகள், அவர் காலத்திய பண்பாடு, பொருளியல், அரசியல் சார்ந்த குறிப்புகள் முதலியன இடம்பெற்றுள்ளன
உ.வே.சா. அவர்கள் நூல்களைத் தேடிப் பெற்றுக்கொண்ட நிகழ்வுகளும் அவற்றைப் பதிப்பித்த நெறிமுறைகளும் இந்நாட்குறிப்புகளில் காணப்படுகின்றன. இத்தகைய குறிப்புகள்அவரது பதிப்புக் கொள்கைக்குரிய சிறந்த வழிகாட்டியாகக் கொள்ளத்தக்கன.