காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை


Author: டாக்டர் M. ராஜேந்திரன்

Pages: 535

Year: 2020

Price:
Sale priceRs. 650.00

Description

நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை

கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றையும் கே.ராஜய்யன், எஸ்.ஜெயசீல ஸ்டீபன் முதலிய வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களையும் ஆதாரங்களாகக் கொண்டு இந்த நாவலுக்கான அடித்தளங்களைக் கட்டமைத்திருக்கிறார் மு.ராஜேந்திரன். வேலு நாச்சியாரும் அவரது மருமகன் பெரிய உடையணரும் தலைமறைவாயிருந்த விருப்பாச்சிக் காடுகளிலிருந்து பினாங்கு, சுமத்ரா வரையில் இந்த வரலாற்றுச் சுவடுகளைப் பின்தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.

1801- இல் சுமார் ஆறு மாதங்கள் நடந்த காளையார்கோவில் போரை நாட்டின் முதல் சுதந்திரப் போர் என நிறுவ முடிந்தாலும்கூட இன்னமும் உரிய இடம் அல்லது பெருமை அதற்கு வழங்கப்படவில்லை.

காளையார்கோவில் போரை முன்வைத்து ஆசிரியர் எழுதிய “1801′ நாவலின் தொடர்ச்சி அல்லது அதன் ஒரு பகுதிதான் “காலா பாணி’ நாவல் என்று கொள்ளலாம். இரு நூறு ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மன்னரும், நாட்டின் முதல் புரட்சித் திலகம் வேலு நாச்சியாரின் மருமகனுமான வேங்கை பெரிய உடையணத் தேவன் மற்றும் அவர் கூட்டாளிகள் 72 பேர் நாடு கடத்தப்பட்ட கதைதான் இந்த நாவல்.

பெரிய உடையணத் தேவன் கைது செய்யப்பட்டதில் தொடங்கி, திருமயம் கோட்டையிலிருந்து தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு, துறைமுகத்தில் கப்பலேற்றி, பினாங்கிற்குக் கடத்தப்பட்டு, அங்கே அவர்கள் மாண்ட துயரக் கதையைச் சிறப்பாக எழுதிச் செல்கிறார் ஆசிரியர். வேங்கை உடையணத் தேவனும் குழுவும் நாடு கடத்தப்பட, அவருடைய உறவுகள் படும்பாடுகள் எழுதப்பட்டுள்ள விதம் சிறப்பு.

கடலுக்கு அப்பால் நடந்த கதையின் சில பகுதிகள் மட்டும் வரலாறும் புனைவுமாகக் கலந்திருக்கிறது. நாவலாசிரியர் நாவல் சம்பந்தப்பட்ட வரலாற்றிடங்களை எல்லாம் நேரில் சென்று பார்த்து நாவலைச் செறிவூட்டியுள்ளார்.

உடையணத் தேவனின் மனைவியும் மற்றொரு வீரமங்கையுமான மருதாத்தாள் பாத்திரத்தை மேலும் புனைவுகள் சேர்த்து, நாவலின் செயற்படு நாயகியாக வலுப்படுத்தியிருக்கலாம். எந்தவொரு வரலாறு என்றாலும் நெடுகிலும் மேஜர் ஜேம்ஸ் வெல்ஷ்களும் கிறிஸ்டியானாக்களும் ஆங்காங்கே இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

நாவல் செல்லும் தடத்திலேயே அன்றைய தமிழகத்தின், தமிழர்களின் வாழ்க்கைச் சூழல், பிரிட்டிஷாரின் நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகள் என பிறவற்றையும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

You may also like

Recently viewed