Description
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம் எனலாம்.ஆனால் அது அநீதியா என்பது மிகமிகச் சிக்கலான வினா. அது மகத்தான அறச்சிக்கலின் தருணம் என்று மட்டுமே சொல்லமுடியும். ஆகவேதான் மகாபாரதம் முடிவடையாத அறப்புதிர்களின் களமாக இன்றும் உள்ளது. அதில் நல்லவர்களோ கெட்டவர்களோ இல்லை. மாமனிதர்களின் மகத்தான இக்கட்டுகளே உள்ளன. அந்தக் களத்தைத் தொடங்கிவைக்கும் நாவல் இது.மகாபாரதம் இந்தியப் பண்பாட்டின் ஒட்டுமொத்த ஞானமும் ஒரே நூலில் திரண்டிருப்பது. ஆகவேதான் அது ஐந்தாம் வேதம் என அழைக்கப்படுகிறது. இந்நூல் அந்த ஞானக்களஞ்சியத்திற்குள் செல்லும் தோரணவாயில்.வடிவ அளவில் இது ஒரு முழுமையான தனிப்படைப்பு. இதன் மொழியும் கட்டமைப்பும் இதற்குள்ளேயே நிறைவை அடைகின்றன. ஆனால் வெண்முரசு என்ற பெயரில் மகாபாரதத்தை ஜெயமோகன் விரிவாக எழுதிவரும் நாவல்தொடரின் தொடக்க நாவலும்கூட.ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதம் நாவல் வரிசையின் முதலாவது நூல் முதற்கனல்.496 பக்கங்கள் கொண்ட நாவல் இது. 50 வண்ணப் புகைப்படங்களும் இந்நாவலில் உள்ளன.