Description
தமிழில்: B.R. மகாதேவன்முதல் முறையாக எளிய தமிழில் புதிய மொழியாக்கம்.· · ·மனித குல வரலாற்றில் ஆதிக்க சக்திகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் மகாத்மா காந்தி முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போர் முறைக்கு இணையான இன்னொன்று இல்லை. பரவலான மக்கள் பங்கேற்பு, குறைவான இழப்பு, வலுவான வெற்றி மூன்றையும் சாத்தியமாக்கியது இந்த அதிசயப் போர்முறை. விரோத உணர்வை அல்ல, நட்புறவை வளர்ப்பதே இதன் முதன்மையான நோக்கம்.முதன் முதலில் காந்தி இதை நடைமுறைப்படுத்தியது தென்னாப்பிரிக்காவில். பிரிட்டிஷாருக்கு எதிரான அந்தப் போராட்டத்தின் அனுபவங்களை ஆதாரமாக வைத்தே இந்திய சுதந்தரப் போராட்டத்தையும் முன்னெடுத்து காந்தி வெற்றி கண்டார்.அந்தவகையில் தென்னாப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்துக்கு மிகப் பெரிய வரலாற்று முக்கியத்துவம் உண்டு. அந்தச் சரித்திர சாதனையை நிகழ்த்திக்காட்டிய மகாத்மா காந்தியால் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பு.மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, ஆங் சாங் சூச்சி, தலாய் லாமா என உலகம் முழுவதிலுமான அகிம்சைப் போராளிகளின் கூடாகத் திகழும் சத்தியாகிரகம் என்ற ஆலமரம் எப்படி மண்ணைப் பிளந்துகொண்டு முளைவிட்டது என்பதை இந்தப் புத்தகம் மிகத் துல்லியமாக விவரிக்கிறது.என் வாழ்க்கையே என் செய்தி; என் கொள்கையே என் வாழ்க்கை என வாழ்ந்து காட்டிய காந்தியின் வார்த்தைகளில் அவருடைய வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம் இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு அநீதிகளுக்கு எதிராக இன்றும் போராடிவரும் மக்களுக்குத் தேவையான போராட்ட உத்திகளும் பாடங்களும் இதில் உள்ளன.· · ·காந்திஜி குஜராத்தி மொழியில் ‘தென்னாப்பிரிக்க சத்தியாக்-கிரகம்’ புத்தகத்தை 26 நவம்பர் 1923 முதல் எழுத ஆரம்பித்தார். அப்போது அவர் ஏர்வாடா சிறையில் இருந்தார். நவஜீவன் இதழில் 5 ஜூலை 1925-ல் இருந்து ‘தக்ஷின் ஆஃப்ரிகானா சத்யாக்ரஹானோ இதிகாஸ்’ என்ற பெயரில் அது வெளியானது. மகன்லால் காந்திக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகம் 1924, 1925 ஆண்டுகளில் இரண்டு பாகங்களாக வெளியானது. குஜராத்தியில் இருந்து ஆங்கிலத்துக்கு வாலஜி தேசாயால் மொழி பெயர்க்கப்பட்டது. நவஜீவன் பதிப்பகம், டிசம்பர் 1950-ல் திருத்தப்பட்ட ஆங்கில இரண்டாம் பதிப்பை வெளியிட்டது. 1961-ல் மூன்றாம் பதிப்பு வெளியானது. இந்தத் தமிழ் புத்தகம் மூன்றாம் பதிப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.· · ·மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869 அக்டோபர் 2 அன்று குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தரில் பிறந்தார். லண்டனில் வழக்கறிஞர் பயிற்சி முடித்த காந்தி தென்னாப்பிரிக்காவில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்காக வழக்காடச் சென்றார். அங்கு இந்தியர்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதைப் பார்த்து சத்தியாகிரகம் என்ற அகிம்சைப் போராட்டத்தை ஆரம்பித்தார். 1915-ல் இந்தியா திரும்பியவர் முழுவீச்சில் இந்திய சுதந்தரத்துக்காகப் பாடுபட்டார். சாதியால், மதத்தால், மொழியால் பிரிந்து கிடந்த தேசம் ஒன்று சேர்ந்து அவர் காட்டிய அறவழியில் போராடத் தொடங்கியது.ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் போன்ற மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தார். இந்திய அரசு பிரிட்டிஷாரிடமிருந்து 1947 ஆகஸ்ட் 15-ல் விடுதலை பெற்றது. 1948, ஜனவரி 30 அன்று காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.