Description
வண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்தை அளிக்கிறது. ஒவ்வொரு துளி நீரும் எப்படியோ கடலைச் சென்றடைவது போல இதில் அத்தனை உணர்ச்சிகளும் மெதுவாக பாரதப்பெரும்போர் நோக்கிச் செல்கின்றன. இந்தப் பெருநாடகத்தின் நாயகர்கள் நால்வர். துரோணர், துரியோதனன், கர்ணன், ஏகலவ்யன். நால்வருமே அவர்களை மீறிய வாழ்க்கையின் விசைகளால் பழிவாங்கப் பட்டவர்கள். அந்த ஆறா ரணத்தை ஆன்மாவில் ஏந்திய வர்கள். அவ்வகையில் இந்நாவல் ஒன்றோடொன்று பிணைந்து பெருகிச் செல்லும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத திசையை சித்திரிக்கிறது. இன்னொரு சரடாக இதில் ஓடுவது அந்த வாழ்க்கைப் பெருக்கைப்பற்றிய இந்திய ஞானமரபின் தரிசனங்கள் என்னென்ன என்ற வினா. இந்தியாவின் பெருநிலம் வழியாகச் செல்லும் இளநாகன் அந்தக் கேள்விகள் வழியாகச் சென்று இன்னொரு புள்ளியைச் சென்றடை கிறான்.வாழ்க்கையும் தத்துவஞானமும் ஒன்றுடன் ஒன்று பின்னி ஒன்றுக்கு ஒன்று அர்த்தம் கொடுத்துச் செல்லும் சித்திரத்தை அளிக்கும் நாவல் இது. 784 பக்கங்கள் கொண்ட நாவல் இது. 71 வண்ணப் புகைப்படங்களும் இந்நாவலில் உள்ளன.