Description
உலகின் மிகச் சிறந்த ராணுவ ராஜதந்திரியாகவும் மதிநுட்பம் கொண்ட அரசியல் தலைவராகவும் இன்றளவும் ஜூலியஸ் சீசர் திகழ்கிறார். ஜூலியஸ் சீசர் தனது அரசியல் பாதையை வகுத்துக்கொள்ளத் தொடங்கியபோது ரோமாபுரி கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் இருந்தது. உள்நாட்டுப் போர்களும் குழு மோதல்களும் அதிகாரப் போட்டிகளும் உச்சத்தில் இருந்தன. எதிரி யார், நண்பன் யார் என்று பிரித்துப் பார்க்கமுடியாதபடி சூதும் வஞ்சகமும் பொறாமையும் சீசரை எந்நேரமும் சூழ்ந்துகொண்டிருந்தன. இந்த நிலையிலும் சீசர் கனவு காண்பதை நிறுத்திக்கொள்ளவில்லை. அலெக்சாண்டரைப் போல் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியமைக்க அவர் விரும்பினார். சர்வ அதிகாரங்களையும் தன்னிடம் குவித்துக்கொண்டு, ரோமாபுரியின் எல்லைகளை விரிவு படுத்தி, எதிரிகளை அடிபணிய வைத்து வரலாற்றின் போக்கை மாற்றியமைக்க விரும்பினார். அசாத்தியமான இந்தப் பெருங்கனவைப் படிப்படியாகத் திட்டமிட்டு நனவாக்கினார் சீசர். ரோமானியக் குடியரசு பிரம்மாண்டமான ரோம சாம்ராஜ்ஜியமாக உருப்பெற்றது. ஒரே சமயத்தில் குடிமக்களிடையே பெரும் மதிப்பையும் எதிரிகளிடையே பெரும் அச்சத்தையும் சீசரால் தோற்றுவிக்க முடிந்தது. அதற்கு சீசர் கையாண்ட அரசியல், ராணுவ வழிமுறைகள் அவரை உலகின் மகத்தான தலைவராக அடையாளப்படுத்தியது. ஜனனி ரமேஷின் இந்தப் புத்தகம் ஜூலியஸ் சீசரின் அசாதாரணமான வாழ்வையும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் வண்ணமயமான வரலாற்றையும் ஒருங்கே விவரிக்கிறது.