Description
சென்னையின் நீர்வழித்தடங்களைச் சுருக்கமாகவாவது தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் நம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முதன்மையான காரணம் நவம்பர் 2015ல் பெய்த பெருமழையும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும்தான்.துண்டிக்கப்பட்ட தனித் தீவாக சென்னை நகரம் மாறியபோது தவிர்க்க-இயலாதபடி, கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரி, கொசஸ்தலை ஆறு, செங்குன்றம், பூண்டி போன்ற பெயர்களை ஊடகங்கள் உச்சரிக்கத் தொடங்கின. ஆண்டு தவறாமல் வறண்டு போகும் சென்னைக்கு மழை ஒரு சாபமாக மாறும் என்றோ இத்தனை பெரிய சேதத்தை இந்நகரம் சந்திக்கும் என்றோ கனவிலாவது நாம் நினைத்துப் பார்த்திருப்போமா? இருந்தும், இயற்கையையும் அரசியலையும் குறைகூறிய கையோடு இந்நிகழ்வை நாம் கடந்துசென்றுவிட்டோம் என்பதுதான் அனைத்தையும்விடப் பெரிய வேதனை.நாம் மறந்துவிட்ட பலவற்றை நினைவுபடுத்துவதே இந்தப் புத்தகத்தின் முக்கிய நோக்கம். பண்டைய தமிழர்கள் நீர்நிலைகளை எப்படிப் பேணினார்கள்? அழுக்குக்கு உதாரணமாகச் சொல்லப்படும் கூவத்தின் ஆரம்ப வரலாறு என்ன? பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னையின் நீர்நிலைகள் எப்படி இருந்தன? அடையாறும் பக்கிங்காம் கால்வாயும் இன்று எந்த நிலையில் உள்ளன? சென்னையின் நீர்நிலைகளை விவரித்துச் செல்லும் இந்தப் புத்தகம் ஒரு வகையில் சென்னையின் சுருக்கமான வரலாறும்கூட. சுவாரஸ்யமூட்டும் வகையில், சங்க இலக்கியம் தொடங்கி பாரதியார், பாரதிதாசன், அன்னி பெசண்ட், ம.பொ.சி என்று பலருடைய மேற்கோள்கள் இதில் இடம்-பெற்றுள்ளன.தினகரன், தினமலர், தினமணி தொடங்கி 20 ஆண்டுகால ஊடக அனுபவம் பெற்ற கோ. செங்குட்டுவன் எழுதிய இந்நூல் சென்னையை ஒரு புதிய கோணத்தில் நமக்கு அறிமுகம் செய்துவைக்கும்.