Description
வியாச முனிவரால் எழுதப்பட்ட பதினெட்டு புராணங்களுள் ஒன்றான வாமன புராணம், பகவான் ஸ்ரீமன் நாராயணன் குள்ளமான சிறிய வடிவம் எடுத்து மூவுலகையும் தனது மூன்றடியால் அளந்து திரிவிக்கிரமனாக தோன்றிய வரலாற்றைக் கூறுகிறது.மகாபலியை சம்ஹாரம் செய்ய வந்ததுதான் முதல் வாமன அவதாரம் என்று எண்ணியிருக்கிறோம் அல்லவா! இல்லை! மகாபலியிடத்தில் வந்தது இரண்டாவது வாமன அவதாரம். மகாவிஷ்ணு துந்து என்ற அரக்கனை அழிக்கத்தான் முதன் முதலாக வாமனனாக அவதாரம் எடுத்துள்ளார் என்று கூறும் வாமன புராணம் அந்த நிகழ்வையும் எடுத்துரைக்கிறது.மேலும், தட்சனின் யாகம், இமயவான் மகளாக பார்வதி தேவி பிறந்தது, காம தகனம், விநாயகர் பிறந்த கதை, முருகப் பெருமான் கதை, மகிஷாசுரன் வதம், அந்தகன் கதை, விஷ்ணு வாமன அவதாரம் எடுத்த கதை, சிவன் அந்தகனைக் கொல்லுதல், மகாவிஷ்ணு காலநேமியைக் கொல்லுதல், பிரம்மாவின் நான்கு தலைகளின் தோற்றம், வாலி மற்றும் சுக்ரீவன் முற்பிறவி ஆகியவையும் இந்த வாமன புராணத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன.இன்னும் ஆசிரம தர்மம், தானம், தர்மத்தின் குணங்கள், நரகங்களின் தன்மைகள், லிங்க பூஜையின் தோற்றம், லிங்க பூஜையின் மகிமை, புத்திரன் - சிஷ்யன் உறவு முறை, அட்சய திருதியையின் சிறப்பு போன்றவற்றைப் பற்றியும் இப்புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.நாரதருக்கு புலஸ்திய மகரிஷி இப்புராணத்தைச் சொல்லி வரும்போது இப்புராணத்தைப் படிப்பவர்கள், கேட்பவர்கள் யாராகிலும் அவர்கள் அஸ்வமேத யாகம் செய்பவர் பெறும் பயன்கள் அனைத்தும் பெறுவார்கள் என்றும், முடிவில் அவர்கள் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு லோகத்தை அடைவர் என்றும் சொல்கிறார்.நாமும் வாமன புராணம் படித்து விஷ்ணுவின் திருப்பாதகமலங்களைச் சரணடைவோம் வாருங்கள்.