Description
மாதொருபாகனாராகிய சிவபெருமானுக்கு வழிவழியாக பூஜை செய்யும் சிவவேதியர் குலமே ஆதிசைவர் மரபு. குருக்கள், பட்டர், நாயனார், நாயகர், சிவாசாரியார் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களிலும் திருத்தொண்டு செய்துவரும் இவர்களை தமிழில் உள்ள பக்தி இலக்கியங்கள் பொதுவாக ‘ஆதிசைவர்கள்’ என்றே அழைக்கின்றன.ஆதிசைவர்களுக்கும் சிவபெருமானுக்கும் உள்ள பந்தமும் ஆதிசைவர்களுக்கும் சைவ சமயத்திற்கும் உள்ள பந்தமும் அளவிட முடியாதது. ஆதிசைவர்களின் தொன்மை, அவர்களது திருத்தொண்டு, ஆதிகாலத்தில் மன்னர்களால் போற்றப்பட்டு ராஜகுருவாகத் திகழ்ந்தவர்கள், பின்னாளில் முகலாயப் படையெடுப்பின்பொது அடைந்த துன்பங்கள், மாற்று தேசத்து அரசர்கள் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி என இந்த 20-ம் நூற்றாண்டுவரை தங்கள் உரிமைகளை பெருமைகளை தனித்தன்மையை இழந்து வாழும் துயரநிலை என்று அனைத்தையும் இந்நூல் விவரிக்கிறது.சிவாசாரியார் மரபு பற்றி சங்கநூலாகிய பரிபாடல் முதல் பல்வேறு இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் உள்ள செய்திகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் பெரிதும் முயன்று தொகுத்து இந்நூலில் தந்துள்ளார் நூலாசிரியர் தில்லை எஸ். கார்த்திகேய சிவம்.ஆதிசைவ மரபில் உதித்து தமிழுக்கும் சைவத்துக்கும் அருந்தொண்டாற்றிய அருளாளர்கள் வரலாறு, ஆதிசைவ மடங்களின் விரிவான விவரங்கள், ஆதிசைவ சிவாசாரியார்களின் பெருமைகள், கடமைகள், பணிகள், பழக்கவழக்கங்கள் என நூலாசிரியர் கார்த்திகேய சிவம் பல தளங்களிலும் அலசி ஆராய்ந்து எழுதியிருக்கும் ‘ஆதிசைவர்கள் வரலாறு’ படிக்கப் படிக்க வியப்பில் ஆழ்த்துவதுடன், பிரமிக்கவும் வைக்கிறது.இது ஒரு சமூகத்தின் வரலாறு மட்டுமல்ல, இந்து மதத்தின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் சைவ சமய உலகத்தின் உன்னத சரித்திரமும் ஆகும்.