Description
தமிழில்: B.R. மகாதேவன் ‘இந்தியர்களுக்கு முறைப்படி கல்வியை அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே; அவர்கள் வருகைக்கு முன்பு இந்தியா இருண்டு கிடந்தது. உயர் சாதியினர் ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் கல்லாதவர்களாக இருந்தனர். இவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த கல்வியை வழங்கி அறிவொளியைப் பரவலாக்கியது பிரிட்டிஷ் ஆட்சியே.’ காலனியாதிக்கவாதிகள் மட்டுமல்ல இந்தியர்களிலேயே பெரும் பகுதியினர் இதை உண்மை என்றே கருதி வருகின்றனர். காந்தியவாதியும் தனித்துவமான ஆய்வாளருமான தரம்பாலின் இந்நூல் இந்த மாயையை உடைத்து நொறுக்குவதோடு இந்தியாவின் பெருமிதத்துக்குரிய பாரம்பரியக் கல்வியின் வரலாற்றை ஏராளமான தரவுகளோடும் மறுக்கமுடியாத ஆதாரங்களோடும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. 18ம் நூற்றாண்டு பாரம்பரியக் கல்வி குறிப்பிட்ட சிலருக்கானதாக இல்லாமல் அனைவரையும் அரவணைத்துக்கொள்ளும் நோக்கில் இருந்தது என்பதோடு இன்றும் நம்மை ஆச்சரியப்படுத்தும் அளவுக்குச் செழுமையானதாக இருந்தது என்று வாதிடுகிறார் தரம்பால். கல்வி என்றால் என்னவென்பதை பிரிட்டனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவில்லை. மாறாக, நம்முடைய கல்வி அமைப்பிலிருந்து பிரிட்டன்தான் நிறைய கற்றுக்கொண்டது என்கிறார் அவர். பெரும்பாலும் கல்வி இலவசமாகவே தரப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் அதிக எண்ணிக்கையில் அடிப்படைக் கல்வி பெற்றிருக்கிறார்கள். சொற்ப எண்ணிக்கையில்தான் என்றாலும் பெண்களுக்கும் கல்வி போதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வண்ணமயமான கல்வி அமைப்பை பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் திட்டமிட்டு அழித்தொழித்ததோடு, தவறான ஒரு சித்திரத்தையும் உருவாக்கிப் பரப்புரை செய்தனர். இந்த உண்மையை பிரிட்டிஷ் ஆவணங்களைக் கொண்டே தரம்பால் அழுத்தமாக நிரூபிக்கிறார். இந்தியாவின் கடந்த காலத்தைச் சாயங்களோ சாய்மானமோ இன்றி நேர்மையாகப் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம்.