Description
புகழிலும் வலிமையிலும் பாண்டியப் பேரரசு உச்சத்தில் இருந்த காலத்தைக் களமாகக் கொண்டு விரிகிறது இந்த வீரஞ்செறிந்த வரலாற்றுப் புதினம். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகன்களான வீர பாண்டியனுக்கும் சுந்தர பாண்டியனுக்கும் இடையில் தோன்றும் பகையும் மோதலும் ஒரு பெரும் போராக நீள்கிறது. சுந்தர பாண்டியன் தன் தந்தையைக் கொன்று அரியணையைக் கைப்பற்றுகிறான். மற்றொரு பக்கம், தென் இந்தியாவின் செல்வங்களைக் கொள்ளையடிக்க அலாவுதீன் கில்ஜியின் நம்பிக்கைக்குரிய தளபதியான மாலிக்கபூர் டெல்லியிலிருந்து பெரும் படையோடு திரண்டுவருகிறான். மதுரையை வென்று, கோயில்களை அழித்து, நகரத்தையே தரை மட்டமாக்குவதுதான் அவன் திட்டம். ஒருபுறம் சகோதரச் சண்டை. மறுபுறம் மாற்றான் படையெடுப்பு. சூதும் வெறுப்பும் வெறியும் பழிவாங்கும் துடிப்பும் அதிகாரப்போட்டியும் தீ நாக்குகள்போல் கிளம்பி மதுரையைப் பற்றிக்கொள்கின்றன. உலுக்கியெடுக்கும் உச்சகட்ட சாகச அனுபவமொன்றை ஆர். வெங்கடேஷ் இந்நாவலில் நமக்கு வழங்குகிறார்.