Description
நாளுக்கு ஒரு புதுமை - நாழிகைக்கு ஒரு புதுமை என இயற்கையின் உந்துதல்களால் அலைக்கழிக்கப்படுவது கன்னிப் பருவம். இந்தக் கிளர்ச்சிகளைத் தன்னுள் தானே அடக்கிக்கொள்ள முயல்வதும், சமூகமும் தன் வரையறை களால் கட்டுப்படுத்திக்கொள்ள முயல்வதும் எனப் பெரும் போராட்டத்தின் களமாக நிற்கிறாள் கமலா. பெண்ணுடலையும் அதன் ரகசிய வேட்கைகளையும் இயற்கைக்குப் புறம்பான அறிவோடு இந்தியச் சமூகம் எதிர் கொள்ளப் பார்க்கிறது. ஆன்மிக உணர்வு களையும் துணைக்கழைக்கிறது. இவற்றின் வழியாக காதலை உடல் இச்சைக்கு அப்பால் நிறுத்திப் பார்க்க வும் ஆத்ம ஒட்டுறவை நந்தாச் சுடராக அணையாது காக்கவும் விரும்புவதாக ஒரு கன்னி தன் காதல் உணர்வை வெல்லப் பார்க்கிறாள்; சமூக உள்ளுணர்வுகளோடு ஒத்திசைய லாம் என்பது அவளின் கற்பனை. இந்தக் கற்பனை காலத்தைக் கடந்து செல்லப் பார்க்கிறது. ஆனால் அந்தக் கற்பனை வெல்லுமா? உடலியலை உளவியல் ரீதியான தன்மையில் அணுகுகிற இந்த நாவல், ஒரு புதிய உலகைத் திறக்கிறது. தமிழில் இதுவரை அறியப்படாத முயற்சியில் எழுதப்பட்டிருக்கிறது ‘கன்னிகா’