Description
மன்னராட்சியின் முடிவுக்கும் மக்களாட்சியின் மலர்வுக்கும் இடைப்பட்ட காலத்தில் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் சிறந்த நிர்வாகி, தேர்ந்த சீர்த்திருத்தவாதி, ஒப்பற்ற தலைவர்.
நாடுபிடிக்கும் ஆசையால் அவர் போரிடவில்லை. சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்குத்தான் முதலிடம் தந்தார். தன் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் பதவிகளைப் பங்கிட்டு அளித்து நல்லாட்சி தந்தார். எதிரிகளைக் கண்காணித்த அதேநேரத்தில் திருந்தவும் வாய்ப்பளித்தார். கைதிகளை ஆக்கப் பணிகளில் ஈடுபடுத்தினார். தொழில்முனைவோர் ஊக்குவிக்கப்பட்டனர். விவசாயத்திலும், போக்குவரத்திலும் சீர்த்திருத்தங்கள் நடந்தன. சமாதானத்திற்கான போர் நிறுத்த ஒப்பந்தங்களின் போதான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. மத நல்லிணக்கம் பேணப்பட்டது.
அரசே துப்பாக்கித் தொழிற்சாலைகளை நடத்தியது. தனியார் நிறுவனங் களைப்போலவே ஏற்றுமதிக்கான சுங்கத் தீர்வையைச் செலுத்தியது. அரசு நடத்தும் நிறுவனத்தின் பங்குகளை குடிமக்களாலும் வாங்கமுடிந்தது.
நாட்டியம் பார்ப்பார், வேட்டைப் பிரியர், ஓய்வை தன் அப்பா கட்டிய 'தரியா தவுலத் எனும் விடுமுறைக்கால உல்லாசப் போக்கிடத்தில் அதிகாரி களுடனும், மகன்களுடனும் செலவிடுவார். வரலாற்று நூல்களையும் தத்துவ நூல்களையும் வாசிப்பார். அறிவியல், மருத்துவம், இசை, ஜோதிடம், பொறியியலை ஆர்வமாகப் பயின்றாலும், இறைமையியலும், சூஃபி கோட் பாடுகளும் பிடித்தமானவை. கன்னடத்திலும், இந்தியிலும் பேசமுடிந்தாலும் பாரசீக மொழியில் எளிதாகப் பேசுவும், எழுதவும் செய்தார்.
ஒப்பந்தங்களை மீறி ஆங்கிலேயரும் நிஜாமும், மராத்தியரும் சேர்ந்து போரிட்டபோதும் பின்னடையச் செய்தார். பீரங்கி, ராக்கெட், அரண் இவற்றில் செலுத்திய அதே கவனத்தை கப்பட்படையிலும், குதிரைப் படையிலும் செலுத்தியிருந்தால் போரின் போக்கே மாறியிருக்கும்.
பலமுறை ஏமாந்தபோதும் நெப்போலியனின் பிரஞ்சுப்படைகள் எகிப்தில் வென்றால் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதில் தனக்குதவும் என்று நம்பினார். ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்டியிருந்தால் தம்மையும் காப்பாற்றிக் கொண்டு மகன்களையும் அரியணையில் ஏற்ற வாய்ப்பிருந்தும் சுயேச்சையாய் செயல்பட்டதனாலேயே ஆட்சி அதிகாரத்தையும், உயிரையும் இழந்தார்.
கேளிக்கைகளில் அதிக நாட்டமில்லாத அவரது வாழ்க்கை இன்றைய ஆட்சியாளர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் சிறந்ததோர் முன்னுதாரணம்.