Description
எழுதப்படும் ஒவ்வொரு கதைகளுக்கும் பொருத்தமான ஒரு தலைப்பை யோசிப்பதே இன்னொரு கதை போன்று இருக்கும். குறுங்கதைகள் என்று முடிவான பின்பு தலைப்பிற்காக ஒரு நாள் யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். எழுதி வைத்திருந்த அத்தனை குறுங்கதைகளும் சின்னச் சின்னதாய் நிகழ்வுகளாகவும் எழுத்துகளாகவும் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தன. சோ….வென்று மழை பெய்து முடிந்த ஒரு முன்னிரவு. மழையின் சொச்சங்களாக சாரல்கள் காற்றுடன் ஏதோ உடன்படிக்கை செய்து கொண்டு ‘நீ பாடு – நான் ஆடுகிறேன்’ என்று கூத்தடித்துக்கொண்டிருந்தன. இயற்கையின் கூத்துகள் தான் எவ்வளவு வேடிக்கையானவை. தன் ஆட்டம்-பாட்டத்திற்கு மனிதர்களை அவை ஒரு பொருட்டாக எப்போதுமே மதித்ததில்லை. அதனை கண்டுகளித்தவாறே ரொம்ப நேரம் அமர்ந்துவிட்டேன் என்றும் நினைவுகள் எங்கெங்கோ என்னை கூட்டிச் சென்றுவிட்டது என்றும், வெகுநேரம் ஆன பின்புதான் என்னால் உணர முடிந்தது. சிலநேரங்களில் மெய் மறந்துவிடுவது இயல்பு. அந்நேரத்தில் உடல் அசைவுகள் இருப்பதில்லை, நிதானம் இருப்பதில்லை, மனம் போன போக்கில் அதை விட்டுவிட்டு கட்டுப்படுத்த எண்ணமின்றி நாமும் அதன்பின்னே ஓடிவிடுகிறோம். அந்நேரத்தில் எனக்கு ‘கண் இமைகள்’ மட்டும் சிமிட்டிக்கொண்டதாக ஒரு ஞாபகம் தட்டியது.