Description
ஆங்கிலத்தில் வெளிவந்த தருணம் முதல் இன்றுவரை மிகுந்த சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் சந்தித்துவரும் முக்கியமான வரலாற்று நூல்.
இந்திய வரலாற்றில் அதிகம் வெறுக்கப்படும், அதிகம் தூற்றப்படும், இன்று விவாதிக்க முற்பட்டால்கூட சர்ச்சைக்கு உள்ளாகும் ஒரு மன்னர் உண்டென்றால் அவர் ஔரங்கசீப்தான். கொடுங்கோலர், மதவெறியர், இந்துக்களை வெறுத்தவர், கோயில்களை இடித்தவர் போன்றவைதான் அவர் அடையாளங்களாக இன்று பொதுவெளியில் அறியப்படுகின்றன. வரலாற்றின் நினைவுகளிலிருந்து அவர் பெயரை அழித்துத் துடைத்துவிடவேண்டும் என்று தீவிரமாக ஒரு சாரார் இயங்கிக்கொண்டிருப்பதை இன்றும் காணலாம்.
கண்டனங்களும் எதிர்ப்புகளும் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஔரங்கசீப் ஒரு புதிராகவே இன்னமும் நீடிக்கிறார். அவரைக் குறித்து வரலாற்றுப் பதிவுகளைவிட புனைவுகளே அதிகம் உள்ளன. அவற்றைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள எண்ணற்ற கதைகளையும் கற்பனைகளையும் அகற்றி, ரத்தமும் சதையுமான ஒரு மனிதராக ஔரங்கசீப்பை மீட்டெடுப்பதென்பது சவாலானது மட்டுமல்ல,
சிக்கலானதும்கூட. விரிவான வரலாற்றுத் தரவுகளின் உதவியோடு, நடுநிலையான ஆய்வு முறையியலைக் கையாண்டு அந்தச் சவாலையும் சிக்கலையும் வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார்
ஆட்ரே ட்ரஷ்கெ.
இந்த ஆய்வு ஔரங்கசீப்பைக் கொண்டாடவும் இல்லை, தூற்றவும் இல்லை. அவரை அவர் வாழ்ந்த காலத்தில் பொருத்தி ஆராயவும் புரிந்துகொள்ளவும் முற்படுகிறது.