Description
பிள்ளையார் சுழி' நடிகர் டெல்லி கணேஷின் சுயசரிதை நூல். வாழ்க்கைச் சம்பவங்களைப் பூத்தொடுப்பது போல அழகாகத் தொடுத்து எழுதப்பட்ட நூல்.
உண்மைச் சம்பவங்களின் பதிவுதான். ஆனால் கற்பனையாக எழுதப்பட்ட நாவலை விடவும் விறுவிறுப்பாகச் செல்கிறது. நூலில் ஆங்காங்கே விரவியிருக்கும் நகைச்சுவை, படிக்கும் போதே நம் முகத்தில் ஒரு மெல்லிய புன்முறுவலைத் தோற்றுவிக்கிறது. எடுத்தால் படித்து முடிக்காமல் வைக்கத் தோன்றாது. கீழே
கணேசன் என்ற பெயருடைய ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பையன் விடா முயற்சியால் டெல்லி கணேஷ் என்ற நடிகராகப் பரிணமித்ததை விளக்குவதே இந்த நூல்.
'திருநெல்வேலி வல்லநாடு கணேசனை, மதுரை கணேஷாக மாற்றியது டி. வி. எஸ்... மதுரை கணேசனை கார்ப்போரல் கணேஷாக மாற்றியது இந்திய விமானப்படை... ஏர்ஃபோர்ஸ்காரனை நாடகக்காரனாக மாற்றியது டெல்லியின் தக்ஷிண பாரத நாடக சபா... 'டெல்லிகணேஷ்' என்று நாமகரணம் சூட்டி நாடகக்காரனை சினிமாக்காரனாக மாற்றியது திரு. கே.பி...' என முத்தாய்ப்பாக அவர் தொகுத்துச் சொல்லும்போது படிக்கும் நமக்கே ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கைகளை வாழ்ந்த நிறைவு தோன்றுகிறது.