Description
தமிழகத்தைச் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்து தங்கள் முத்திரையை வலுவாகப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறது விஜயநகரப் பேரரசு. 14ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் உதயமான இந்தப் பேரரசுக்கு மற்ற அரசுகளுக்கு இல்லாத ஒரு பெரும் கடமை இருந்தது. அது, தென்னாட்டைப் பெரும் சீரழிவிலிருந்து மீட்கும் பணி.
நிலையற்ற அரசும் கொந்தளிப்பான தன்மையும் நிலவிய மோசமான சூழலிருந்து நாட்டை மீட்டுச் செம்மைப்படுத்தினார்கள் விஜயநகர மன்னர்கள். நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொருளாதார மேன்மை, நீர்ப்பாசனம் என்று தொடங்கி அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவந்ததன்மூலம் தென்னகத்தை அவர்கள் தலைநிமிரச் செய்தார்கள். கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், இடைவிடாத போர்களுக்கு நடுவில் இந்தியாவின் வரலாற்றை விஜயநகரப் பேரரசு அழுத்தந்திருத்தமாக மாற்றி எழுதியது.
விஜயநகரப் பேரரசு எப்படி உருவானது? எந்தெந்த மன்னர்களெல்லாம் ஆண்டனர்? கிருஷ்ணதேவராயர் வகித்த பாத்திரம் எத்தகையது? அவர்களுடைய ஆட்சிமுறை எப்படி இருந்தது? படைபலம் எத்தகையது? கலை, கட்டுமானம், பொருளாதாரம், சமயம் போன்ற துறைகள் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்தன? எஸ். கிருஷ்ணனின் இந்நூல் விஜயநகரப் பேரரசு பற்றிய மிகச் சிறப்பான பருந்துப் பார்வையை அளிக்கிறது.