Description
கறுப்பு அமெரிக்கா
அமெரிக்கா மாபெரும் ஜனநாயக நாடுதான். செல்வம் கொழிக்கும் டாலர் தேசம்தான். உலகளவில் செல்வாக்கைச் செலுத்திவரும் மாபெரும் சக்திதான். ஆனால் அதே அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பின மக்கள் தலைமுறை, தலைமுறையாக ஜனநாயகமின்றி, செல்வமின்றி, செல்வாக்கின்றிக் கடுமையான பாகுபாடுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். கறுப்பின மக்கள் எப்போது, எங்கிருந்து, எதற்காக அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டார்கள்? அவர்களை வெள்ளை அமெரிக்கா எப்படி நடத்தியது? எப்படி அவர்களைச் சமுகத்திலிருந்து விலக்கி வைத்து, ஒடுக்கியது? குறைந்தபட்ச மனிதத்தன்மைகூட இன்றி கறுப்பின மக்களின் வாழ்வும் கனவுகளும் நொறுக்கப்பட்டது ஏன்? வானதியின் இந்நூல் கறுப்பின மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட அநீதிகளை மட்டும் பட்டியலிடாமல் அந்த அநீதிகளை எவ்வாறு அவர்கள் ஒன்று திரண்டு எதிர்கொண்டனர் என்பதையும் தங்கள் உரிமைகளை எவ்வாறு உத்வேத்தோடு போராடி மீட்டெடுத்தனர் என்பதையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஆபிரகாம் லிங்கன், மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங் போன்றோரின் போராட்டங்கள் நேர்த்தியாக விவரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா என்பது கறுப்பினத்தவர்களின் தேசமும்தான். அமெரிக்க வரலாறு என்பது அவர்களுடைய வரலாறும்தான் என்பதை அழுத்தந்திருத்தமாகவும் ஆதாரபூர்வமாகவும் நிறுவும் நூல்.
அமெரிக்க உள்நாட்டுப் போர்
அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் அமெரிக்க உள்நாட்டுப் போர் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வு. அடிமைமுறை நீடிக்கவேண்டுமா என்னும்
கேள்வியை மையப்படுத்தி அமெரிக்கா இரு துண்டுகளாகப் பிளவுண்டு நின்று மோதிக்கொண்ட போர் இது. எந்தவொரு மனிதனும் இன்னொருவரைவிடத் தாழ்வானவர் கிடையாது என்னும் அடிப்படை மானுடக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட போர் என்பதால்தான் இது நீதியின் போர் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போரின் கதாநாயகனாக ஆபிரகாம் லிங்கன் திகழ்ந்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் பெரும்பகுதியை இந்தப் போர் விழுங்கிவிட்டது.